மண்டூரில் மர்மமனிதன் தாக்கியதில் பெண்ணொருவர் படுகாயம்! களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில் மர்ம மனிதனின் தாக்குதலில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் குறித்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

மர்ம மனிதனை தேடியோர் மீது தாக்குதல் - மண்டூரில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் 3ஆம் குறிச்சியில் வீட்டில் உணவருந்தி விட்டு கை அலம்புவதற்காக வெளியில் வந்த திருமதி மேகராசா சரஸ்வதி என்ற பெண் மர்ம மனிதன் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரால் தாக்கப்பட்டதையடுத்து மண்டூரில் நேற்று திங்கட்கிழமை இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மர்ம மனிதனைத் தேடும் வகையில் செயற்பட்ட இளைஞர்கள் மீது பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி. அரியநேத்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணை இன்று செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பவம் நடைபெற்ற பிரதேசத்துக்கும் சென்று பொது மக்களுடன் கலந்துரையாடி வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் வெல்லாவெளி பொலிஸாரையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியையும் சந்தித்து கலந்துரையாடினர்.

திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில வீட்டில் வைத்து மர்ம மனிதன் தாக்கியதில் கழுத்துப்பகுதியில் காயத்துக்குள்ளான மண்டூர் வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் பெண் மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

மண்டூரில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பிரிகேடியர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் தான் நேற்றிரவே உரையாடியதாகவும் இப்போது பதற்றம் தணிந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

தாக்கப்பட்டதில் ஒரு சில இளைஞர்களின் உடலில் அடிகாயங்கள் இருக்கின்ற போதும் பெரியளவான காயங்கள் இல்லை என்பதால் யாரும் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை எனத் தெரிவித்த அவர், யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,

நாங்கள் கொழும்பு சென்று கொண்டிருந்தோம். இவ்விடயம் கேள்வியுற்றதும் பொலநறுவையில் இருந்து திரும்பி இங்கு வந்தோம். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர், பிரிகேடியர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு அறிவித்தோம். அவர்களும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

பாதிக்கப்பட் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்.

எனது பெயர் மேகராஜா சரஸ்வதி. எனக்கு வயது 45. நான் மண்டூர் 3ஆம் குறிச்சியில் வசித்து வருகிறேன். நேற்றிரவு 10.30 மணியளவில் முற்றத்திற்கு வந்தபோது கறுப்பு உடையணிந்த ஒருவர் என் மீது பாய்ந்து எனது கழுத்தைப் பிடித்தார்.

அவர் மரத்திலிருந்து பாய்ந்தாரோ அல்லது கூரையிலிருந்து பாய்ந்தாரோ எனக்குத் தெரியாது. பின்பு மண்டூர் வைத்தியசாலைக்கு என்னை போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிறி, அவரது வாகனத்தில் அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து அம்புலன்ஸ் வண்டியில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டேன். அங்கு எனக்கு சிகிச்சையளித்தனர். இவ் விவகாரத்தை நினைத்துப் பார்க்கையில், வீடு செல்ல எனக்கு அச்சமாக உள்ளது என்று கூறினார்.

கடந்த ஒரு வாரகாலமாக மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுவரும் மர்ம மனிதன் சம்பவங்களினால் பொதுமக்ள் பெரும் அச்சம் மற்றும் பீதியுடனேயே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதுவரை 14க்கும் மேற்பட்ட சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.