மட்டக்களப்பில் விழிப்புலனற்றோர் பாடசாலைக்குள் மர்ம மனிதன் புகுந்து தாக்குதல்!

 மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலைக்குள் புகுந்த இனந்தெரியாத நபரின் தாக்குதலில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று 6.00மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரு கண்களும் பார்வையிழந்த 14 வயதுடைய வி.நளினி என்ற பெண்னே பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் குளித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம மனிதன் குறித்த பெண் மீது தாக்குதல் நடத்திவிட்டுச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பெண்ணின் கழுத்துப்பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த பெண்ணின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேநேரம் நேற்று வியாழக்கிழமை காலையும் குறித்த பகுதியில் தனது பார்வையிழந்த மகனை குளிப்பாட்டிக்கொண்டிருந்த பெண்ணை ஒருவர் கழுத்து நெரித்தபோது குறித்த பெண் குறித்த மனிதன் மீது தாக்கவே அவர் அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் இன்று இனந்தெரியாத நபரின் தாக்குதலுக்குள்ளான பெண்ணும் குளித்துவிட்டு வெளியில் வரும்போது அப்பகுதியில் மறைந்திருந்த நபர் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

குறித்த பகுதிக்கு சென்ற படையினரும் காத்தான்குடி பொலிஸாரும் இது தொடர்பிலான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மாவட்ட இணைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமாக பூ.பிரசாந்தன், சம்பவம் தொடர்பில் தரிசனம் நிர்வாகத்துடன் கலந்துரையாடினார்.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்றுவரும் பெண்ணைப் பார்வையிட்டதுடன் அவரின் நிலை தொடர்பில் வைத்தியர்களுடன் கலந்துரையாடினார்.

அதேவேளை, நேற்றைய தினமும் இதே தரிசனத்தில் வைத்து மர்ம மனிதனால் மாணவிகள் தாக்குதலுக்குள்ளானதும் பின்பு இது விடயமாக தரிசனம் நிருவாகத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தும் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இன்று மாணவி ஒருவர் மர்ம மனிதனால் தாக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பில் கடந்த மாதம் மர்ம மனிதர்களின் தாக்குதல்கள் அதிகரித்திருந்தாலும் தற்போது சற்று குறைந்துள்ள நிலையில், தரிசனத்தில் உள்ள கண் பார்வையற்ற மாணவி தாக்கப்பட்டதானது மீண்டும் மர்ம மனிதன் மட்டக்களப்பில் தனது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளானோ என்ற அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள் தற்போது உள்ளனர்.