சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயரை மாற்றக் கூடாது.கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம்


ஏறாவூர், சதாம் ஹூசைன் கிராமத்தின் பெயரை மாற்ற கூடாது அது சதாம் ஹூசைன் கிராமம் என்ற பெயரிலேயே இயங்க வேண்டுமென கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டம் இன்று புதன்கிழமை மாலை திருகோணமலையில் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண சுகாதார'சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஏறாவூர் சதாம் ஹூசைன் கிராமத்தின் பெயரை மாற்றம் செய்யக் கூடாது தொடர்பாக முன்வைத்த பிரேரணையை சமர்ப்பித்ததையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதையடுத்து அது தொடர்பாக ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு உடனடியாக கடிதம் அனுப்பப்படவுள்ளதாக மாகாண அமைச்சரவை பேச்சாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

1978ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய சூறாவளி அனர்த்தத்தையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வருமாறு அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனிடம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அஹமட் பரீட் மீராலெப்பை ஈராக்குக்கு விஜயம் மேற்கொண்டு வேண்டுகோள் விடுத்ததையடுத்து ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மாதிரிக் கிராமமொன்றை அமைத்துக் கொடுக்க அன்றைய ஈராக் அரசாங்கம் முன்வந்தது.

இதற்கிணங்க பள்ளிவாசல், மத்ரஸா மற்றும் விளையாட்டு மைதானம் உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு கிராமம்; அமைக்கப்பட்டு அதற்கு 'சதாம் ஹூஸைன்' கிராமம் என்று பெயர் வைக்கப்பட்டு 1982ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி பொதுமக்களிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

என்றாலும் தற்போதைய ஈராக் அரசாங்கம் குறித்த கிராமத்தின் பெயரை மாற்றினால் மாத்திரமே உதவி புரியும் என கொழும்பிலுள்ள ஈராக் தூதுவராலயம் அறிவித்துள்ளமையினாலேயே பெயர் மாற்றம் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(எஃப்.எம்.பர்ஹான்)