இலங்கை தமிழரசு கட்சியின் 2012ஆம் ஆண்டுக்கான வருடாந்த தேசிய மாநாடு மட்டக்களப்பில்

கிருஸ்ணா

இலங்கை தமிழரசு கட்சியின் 2012ஆம் ஆண்டுக்கான வருடாந்த தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இதற்கான ஒழுங்கமைப்பு மற்றும் ஏற்பாட்டுக் குழு இன்றைய தமிழரசுக்கட்சியின் மாவட்ட கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இக்குழுவின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளராக முறையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதற்கு மேலதிகமாக இக்குழுவின் உப தலைவரர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கே.துரைராசசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.இராசையா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழுவின் உறுப்பினர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை முதல் படுவான்கரை வரையுள்ள சகல பிரதேசங்களிலுமுள்ள தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் 27பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இம்முறை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் 2012ஆம் ஆண்டுக்கான வருடாந்த தேசிய மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தல்களையும் இக்குழு மேற்கொள்ளவுள்ளதுடன் மாநாடு நடைபெறும் இடம் மற்றும் காலம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


--