ஆரையம்பதியில் திருவாதிரை நிகழ்வுஇன்று சிறப்பாக நடைபெற்றது

(எஃப்.எம்.பர்ஹான்)
திருவாதிரையை முன்னிட்டு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகின்ற பூஜைகளில் இறுதி நாளான இன்று இந்து மக்கள் வாழுகின்ற பிரதேசம் அனைத்திலும் சமுத்திர தீர்த்தத்துடன் பூஜைகள் நடைபெற்றது.
அதிகாலை துயிலெழுந்து நகர் வலம் வந்து திருப்பள்ளி எழுச்சியுடன் பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து திருவெண்பாவை ஓதுவதுடன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் 10 நாட்கள் இடம்பெற்றதுடன் பின்பு இறுதி நாளன்று சமுத்திர தீர்த்த உற்சவத்திற்காக சுண்ணம் அடித்து அனைவரும் சிறியோர் முதல் பெரியோர் வரை நீராடும் திருவிழாவாக திருவாதிரை உற்சவம் நடைபெறுவதும்; இந்துக்களின் நிகழ்வாக உள்ளது.
இம்முறை மட்டக்களப்பில் பல ஆலயங்களிலும் இடம்பெற்ற இவ் உற்சவம் இம்முறை ஆரையம்பதியிலும் மிக சிறப்பாக நடைபெற்றது. ஆரையம்பதி பரமனையினார் ஆலயம், பேச்சியம்மன் ஆலயம், சிவனேஸ்வரர் ஆலயம், திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம் நான்கு ஆலயங்களிலும் உற்சவ மூர்த்திகளும் மாணிக்கவாசகர் நாயனாரும் அடங்கலாக தீர்த்த உற்சவத்துக்காக எழுந்தருளி சமுத்திர தீர்த்தம் முடிந்தவுடன் ஆரையம்பதி கடற்கரை நரசிம்மர் ஆலய முன்றலில் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.
கடந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் இனமுறுகலினால் கடற்கரை பிரதேசத்திற்கு செல்வதில் தடங்கல்கள் காணப்பட்டது.
மாகாணசபை அமைக்கப்பட்ட பின்பு இந்நிலமை ஓரளவு சீர்படுத்தப்பட்ட நிலையில் இவ் உற்சவம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
(எஃப்.எம்.பர்ஹான்)