வெளிப்படையற்ற அரசியலே தமிழர்களை புறம் தள்ளியது கி.மா.ச.உ.பூ.பிரசாந்தன்


படம்: - (எஃப்.எம்.பர்ஹான்) தமிழர்கள் இன்று அரசியலில் அதிக நாட்டம் செலுத்தாமைக்கும், அரசியல் என்றால் அது குறித்த சாராருக்கு மட்டுமே என்று ஒதுங்குவதற்கும் காரணம் வெளிப்படையற்ற தர்க்கித்தல் மூலம் நியாயப்படுத்தக்கூடிய நிலையான கொள்கைகளுடன் தமிழர்களின் கடந்த கால அரசியல் தலைமைத்துவங்கள் வழிநடாத்தாமையே. தேர்தல் காலங்களில் மாத்திரம் வீடு வீடாக, கிராமம் கிராமமாகப் பயணிக்கும் தலைமைகள் சுயநிர்ணய உரிமை, தமிழீழம், வடகிழக்கு இணைப்பு என்று கோசம் விடுவதும் பின்பு சூழலுக்கு ஏற்ப தம்மை நிறம் மாற்றிக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று மழுப்புவதும், மீண்டும் தேர்தல் காலங்களில் படையெடுப்பதாலும் தான் 60 வருடங்களாக தமிழர்களை சிந்திக்க விடாமல் மூடு மந்திரமாக தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் கையாண்ட யுக்திகள். ஆனால் இன்று அவை படிப்படையாக அம்பலமாகத் தொடங்கியுள்ளது.
தமிழர்களை எந்த இலக்கு நோக்கி பயணிக்கச் செய்வது என்ற சிறிதும் வெளிப்பாட்டுத் தன்மையில்லாது 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடகிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட போதும் அதனை வசைபாடி புறக்கணித்தார்கள். பின்பு 2008இல் கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்ற போது வடகிழக்கு எமது கொள்கை என்று அதனை புறக்கணிப்பதாகக் கூறினார்கள். என்று கிழக்கு மாகாணசபை அமைந்ததோ அன்றில் இருந்து பொலிஸ், காணி அதிகாரம் தேவை என்று பலமுறை மாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கோரப்பட்டுவரும் நிலையில் வடக்கில் ஓர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் போது அதில் போட்டியிட வேண்டும் என்ற உள்நோக்கோடு தமிழ் ஈழம் என்ற மாயையை மீண்டும் தமிழர்கள் முன் கொண்டு செல்ல முடியாது என்பதற்காக மாகாண சபை முறைமையே வேண்டாம் என்றவர்கள் பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் வேண்டும் என்று மூன்று வருடங்களாக மாகாண சபை அமைத்தவுடன், குரல் கொடுத்து வந்த த.ம.வி.பு.கட்சியின் கோசத்தின் பின் கையுயர்த்த தொடங்கிவிட்டு நாம் தான் முதலில் கேட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதும், சில பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தம் பிரதிநிதிகள் கேட்டிருக்க வேண்டும் என கூறுவதும், கட்சிக்குள்ளேயே கருத்தின்மையும் முறையான வெளிப்பாட்டுத் தன்மை இல்லாமையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
த.வி. கூ.பிரதிநிதிகளுக்குள்ளேயே இவ்வாறான குழப்பம் இருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கு எவ்வாறு வெளிப்பாட்டுத் தன்மையுடன் செயற்பட இருக்கின்றார்கள். அன்றில் இருந்து இன்று வரை த.ம.வி.பு.கட்சியும் அதன் தலைவர் சி.சந்திரகாந்தனும் மிகவும் தெளிவாக மாகாண சபையினைப் பலப்படுத்த வேண்டும் என்ற தெளிவான கருத்துடனே வெளிப்பாட்டுத் தன்மையுடன் பயணிக்கின்றனர்.
கிழக்கின் துரித அபிவிருத்தி கண்டு எல்லோரும் வியக்கும் நிலையில் மாகாணசபை மூலம் இப்படியும் செய்யலாம் என்று முதலமைச்சர் சந்திரகாந்தன் செய்து காட்டி வருவதனைப் பார்த்து அறுபது வருடம் அரசியல் செய்த அந்த தமிழ் தலைவர்களுக்கு இப்போதாவது புரிந்து கொண்டு போட்டி போட முன்வருவது காலம் கடந்த ஞானம் என்றாலும் பரவாயில்லை இன்றாவது புரிந்துள்ளதே என்பதனை நினைத்து மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் என்றும் எமது கிழக்கு மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டு யாரும் குளிர்காயும் நிலையினை த.ம.வி.பு.கட்சி என்றும் அனுமதிக்கப் போவது இல்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார். மாகாண சபையின் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் மகிழவட்டவான், நரிப்புல்தோட்டம் பிரதான வீதிகள் சுமார் 26 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பிரதேச சபை தவிசாளர் கா.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் பிரதம அதீதியாகக் கலந்து கொண்டதுடன், பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம், பொது அமைப்புக்கள், பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
படம்: - (எஃப்.எம்.பர்ஹான்)