இளைஞர்கள் மத்தியில் தம் மீது தாமே அன்பு செய்யும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும் கி.மா.ச.உ. பூ.பிரசாந்தன்


(எஃப்.எம்.பர்ஹான்)

ஒவ்வொரு இளைஞர்களும் முதலில் தாங்களை நேசிக்க வேண்டும். தங்களைத் தாங்கள் நேசிக்கின்ற போதே சுய ஆளுமைகளையும், தங்களிடம் இருக்கின்ற பலவீனங்களையும் அடையாளம் கண்டு பலமாக்குவதனூடாக பூரணத்துவமான தலைமைத்துவம் உள்ளவர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.



தன் மீது அன்பு செய்கின்ற இளைஞன் தனது குடும்பத்தின் மீதும், மற்றவர்கள் மீதும், சமூகத்தின் மீதும் அன்பு செய்ய முடியும். இன்றைய காலகட்டத்தில் தம்மைப் போன்று பிறரையும் நேசிக்கும் தன்மை மிகவும் தேவைப்பாடாக உள்ளது. இவை இளைஞர்கள் மத்தியில் இருந்தே முதலில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதே நாளைய சமுதாயம் தலை நிமிர்ந்த சமூதாயமாக மாற முடியும். தமது இயலாமையை வளர்க்காது சமூக நீரோட்டத்தில் மேலைத்தேய கலாசார மாற்றங்களுக்குள் தள்ளப்பட்டு கல்வியிலும், பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தாது தவறவிடுபவர்கள் தமது தூரநோக்கிய வாழ்க்கைப் பயணத்தில் பல சவால்களுக்கு முகம் கொடுத்து அதில் வெற்றியடைவதற்கான மனோபலம் அற்றவர்களாகப் போகி;ற நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சோர்வடைந்து தோல்வியடைகின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும்.



கிழக்கு மாகாணத்தில் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி மிக துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகின்ற நிலையில் இளைஞர்கள் தங்களது ஆளுமைகளை விருத்தி செய்து உலக மயமாக்கல் நிலைக்குள்ளும் மாற வேண்டும். மாறாக சினிமா மோகங்களுக்குள்ளும், ஏனைய விடயங்களிலும் உள்வாங்கப்பட்டு காதல் என்ற போர்வையில் களியாட்டங்களில் தங்களது வாழ்க்கையைத் தொலைக்காமல் சிறந்த புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.