90 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் மோசடி ! புலனாய்வு பிரிவு விசாரணை

(ஹனீக் அஹமட்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் சுகாதாரா அமைச்சின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 90 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளமை குறித்து – ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி 90 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் கொள்வனவு செய்வதற்கென சுகாதார அமைச்சிலிருந்து பணம் பெறப்பட்டுள்ளபோதும், கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவ உபகரணங்கள் எவையும் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படவில்லை எனவும், அவை குறித்த பதிவுகள் எவையும் வைத்தியசாலை ஆவணங்களில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

இதேவேளை, சுகாதார அமைச்சு நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மறைக்கப்பட்டு, அவைகளுக்குப் பதிலாக – யுனிசெப் அமைப்பிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதுபோன்ற பல மோசடிகள் உள்ளடங்கலாக மேலும் பல குற்றச்சாட்டுகள் குறித்தும் ஜனாதிபதிப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிய முடிகிறது.
--