நாடு நகரத்திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாகாண சபையில் நிராகரிக்கப்பட்டது.

(கிருஸ்ணா)

மாகாண சபைகளின் அங்கீகாரத்துக்காக மத்திய அரசாங்கத்தினால் மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நாடு நகரத்திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டது.

அத்துடன் எதிர்காலத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக இருந்தால் கிழக்கு மாகாண சபையின் பரிந்துரைகளுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 31ஆம்திகதி அமர்வில் நாடு நகரத்திட்டமிடல் திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் கட்சித்தலைவர்களால் நேரம் போதாமை காரணமாக சபையில் சமர்ப்பிக்க முடியாது என மறுக்கப்பட்டிருந்தது. பின்னர் கடந்த மாதம் 13ஆம்திகதி அது குறித்து விவாதம் சபையில் நடத்தப்பட்டபோது அது சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக சபை 28ஆம்திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பின்னர் சபை முதல்வரால் பெப்ரவரி 27ஆம் திகதியாக மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் சபை நடைபெற்றிருக்கவில்லை. இந்த நிலையில் இம்மாதத்துக்கான அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.

நாடு நகரத்திருத்தச் சட்டமூலமானது, மாகாண சபைகளுக்கென வழங்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கமைவான அதிகாரங்களைக் குறைக்கின்ற வகையில் அமைந்திருப்பதனால் இத்திருத்தத்தினை நிராகரிப்பதாகவும், எதிர்காலத்தில் இச்சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அது கிழக்கு மாகாண சபையின் பரிந்துரைகளை உள்வாங்கியதாக அமைந்திருக்க வேண்டும் எனவும். அதற்கான பரிந்துரைகளை மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பது எனவும் நேற்றைய கிழக்கு மாகாண சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
--