காணி மோசடிகள் தொடர்பிலான பிரச்சினைகளை ஆராய்வதற்கான குழு அமைப்பது தொடர்பிலான கூட்டம்


கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் காணி தொடர்பிலான பிரச்சினைகளை ஆராய்வதற்கும் காணி மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்குமான குழு அமைப்பது தொடர்பிலான கூட்டம் 22.03.2012 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதி மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண காணி,காணி அபிவிருத்தி,கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், மாகாண காணி ஆணையாளர் அனுரதர்மதாஸ,மாவட்ட காணி ஆணையாளர் குகதா ஈஸ்வரன் உட்பட பலர் கொண்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள்,பிரதேச செயலாளர்கள்,பிரதேசபையின் தவிசாளர்கள்,காணி உத்தியோகத்தர்கள்,நில அளவையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணசபைக்கென ஒதுக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மாவட்டத்தில் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் நிலையில் அவ்வாறு ஏற்படும் பிரச்சினைகளை அரசியல் உறுப்பினர்களுடன் இணைத்து சுமுகமாக தீர்வைப்பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்தக்குழு நியமிக்கப்படுவதாக மாகாண காணி ஆணையாளர் அனுரதர்மதாஸ தெரிவித்தார்.
கடந்த 30 வருடகாலத்தில் ஏற்பட்ட கடுமையான யுத்த சூழ்நிலை காரணமாக பல மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களின் காணிகள் வேறு நபர்களால் அபகரிக்கப்பட்டு அந்த இடம் முற்றாக மாற்றப்பட்டுள்ளாதாகவும் அது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் நீதிமன்றம் சென்று தீர்ப்பு வரும் வரையில் மக்களின் பிரச்சினைகள் தள்ளிச்செல்லக்கூடாது என்ற காரணத்தினாலும் மக்களுக்கு குறுகிய கால தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது மாவட்ட காணி தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக மாகாணசபை உறுப்பினர் மாசிலாமணி தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளர்களாக பிரதேச செயலாளர்களான எஸ்.கிரிதரன்,முஸமில்,மாவட்ட காணி ஆணையாளர் திருமதி குகதா ஈஸ்வரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

நிர்வாக சபை உறுப்பினர்களாக மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,நா.திரவியம்,முபீன்,பிரதேச சபை தவிசாளர்களான வி.சிறிதரன்,அமீன்,பிரதேச செயலாளர்களான தனபாலசுந்தரம்,அன்ஸார், காணி உத்தியோகத்தர்களான இளஞ்செழியன்,விஜயகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்குழுவின் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் காணி தொடர்பிலான முறைப்பாடுகளை மாவட்ட காணி ஆணையாளரும் இந்தக்குழுவின் செயலாளர்களில் ஒருவருமான குகதா ஈஸ்வரனிடம் தெரிவிக்கலாம் என இந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக்குழுவானது மாதம் ஒரு தடைவ கூடி தமது செயற்பாடுகள் கிடைக்கப்பெற்ற முறைபப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து ஆறுமாத கால இறுதியில் கிழக்கு மாகாணசபைக்கு மாவட்டடத்தில் உள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த குழு அமைக்கும் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான அம்பாறை மற்றும் திருகோணமலையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண காணி ஆணையாளர் தெரிவித்தார்.

இந்த மூன்று மாவட்டத்தையும் இணைத்ததான மாகாண குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன் அதன் தலைவராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

அதன் குழு அமைக்கும் பணிகள் விரைவில் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேநேரம் இந்த கூட்டம் தொடர்பில் பிரதேச சபையின் தலைவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் பலர் வருகைதராதது தொடர்பில் நிகழ்வில் கவலை தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் இரண்டு பிரதேசசபை தவிசாளர்களே கலந்துகொண்டிருந்தனர்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிப்பிரச்சினை பெரும் பிரச்சினையாகவுள்ள நிலையில் இவ்வாறான கூட்டங்களில் பிரதேசசபை தவிசாளர்கள் கலந்துகொள்ளமை குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.








--