
மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய.
தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ள மீன ராசிநேயர்களே ! புத்தாண்டு ஆரம்பத்தில் ராசிநாதன் குரு 2-லும் சுக்கிரன், கேது ஆகியோர் 3-லும், செவ்வாய் 6-லும் உலவுவது விசேடமாகும். பொருளாதாரநிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனமகிழ்ச்சி பெறுவீர்கள். பணம் கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். வாக்குப் பலிதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவி புரிவார்கள். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றிகள் குவியும். எதிர்ப்புக்கள் விலகும்.
மே 17 முதல் குரு 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டிவரும். பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம். செய்து வரும் தொழிலில் பிரச்னைகள் தலைதூக்கும். தொழில் சம்பந்தமான வழக்கில் சிலர் ஈடுபட நேரலாம்.
எந்த ஒப்பந்தமானாலும் ஒருமுறைக்கு பலமுறை படித்துப் பார்த்து, அதன்பிறகு கையெழுத்திடுவது நல்லது. தொழில் அதிபர்கள் அகலக்கால் வைக்கலாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், பொருள் நடமாட்டமுள்ள இடங்களில் பணிபுரிபவர்களுக்கும் சங்கடங்கள் சற்று அதிகரிக்கும்.
சனி அனுகூலமாக உலவாததால் வேலைப்பளு கூடும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்காமல் போகும். அதனால் மன அமைதி கெடும். வீண்செலவுகள், இழப்புக்கள் ஆகியவை ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதுடன், சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதும் அவசியமாகும். டிசம்பர் 23 முதல் ராகு 8-ஆமிடத்துக்கு மாறி சனியோடு கூடுவது சிறப்பாகாது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. ஆகாய மார்க்கத்தோடு தொடர்பு கொண்டு தொழில் புரிபவர்களுக்குச் சோதனைகள் சூழும். ஜாதக பலம் இருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
பரிகாரம்: குருவையும் தட்சிணாமூர்த்தியையும் தொடர்ந்து வழிபடவும். அஷ்டம சனியின் காலமிது என்பதால் சனிப் பிரீதி செய்வது அவசியமாகும் . அனுமன் சாலீஸா படிக்கவும் அல்லது கேட்கவும். சாதுக்கள், மகான்கள் மற்றும் குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி, அவர்களது ஆசிகளைப் பெறவும்.