
மகரம் : உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய.
புத்தாண்டு ஆரம்பத்தில் ராசிநாதன் சனி 10-லும், ராகு 11-லும் உலவுவது விசேடமாகும். சுக்கிரனும் அனுகூலமாக சஞ்சரிக்கிறார். இதனால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். அயல்நாட்டு வர்த்தகம் அதிக லாபம் தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். தோல் பொருட்களால் ஆதாயம் பெருகும். கறுப்பு நிறப்பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், சுரங்கப் பொருட்கள், தாதுப் பொருட்கள், இரும்பு-எஃகு சம்பந்தப்பட்ட இனங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக லாபம் பெறமுடியும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபடுவீர்கள்.
மே 17 முதல் குரு 5-ஆமிடம் மாறுவது விசேடமாகும். உங்கள் ஜன்ம ராசியையும் 9, 11-ஆம் இடங்களையும் குரு பார்க்கப்போவதால் உடல்நலம் சீராகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புனிதப்பணிகளில் ஈடுபடுவீர்கள். தொலைதூரப் பயணத்தால் அனுகூலம் உண்டாகும். செல்வ நிலை உயரும். பல வழிகளில் ஆதாயம் பெறுவீர்கள். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும்.
ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோர் நலம் சீராகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும்.
ஆகஸ்ட் 8 முதல் தொழில் ரீதியாக விசேடமான அபிவிருத்தியைக் காணலாம். சமுதாய நலப்பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். டிசம்பர் 23 முதல் ராகு 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். வெளிநாட்டுத் தொடர்பால் அதிகம் அனுகூலம் உண்டாகும்.
ஆகாயம் சம்பந்தப்பட்ட இனங்களில் தொடர்பு கொண்டு தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
வானிலை ஆராய்ச்சியாளர்களுக்குப் புகழ் கூடும். 4-ல் கேது உலவத் தொடங்குவதால் தாயாராலும், தாய் வழி உறவினர்களாலும் பிரச்னைகள் தலைதூக்கும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
தாய் நலனிலும், உங்கள் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
பரிகாரம்: எக்காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பும் விநாயகரை வணங்குவது அவசியமாகும். விநாயகர் அகவல் படிப்பது நல்லது.