கும்பம்: 2012 சித்திரை புது வருட ராசி பலன்

கும்பம்: அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய.

புதுவருட ஆரம்பத்தில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். இதனால் அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகள் ஊக்கம் தரும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். அரசுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். இந்த ஆண்டு முழுவதும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இல்லாததால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். தொழில் அதிபர்கள் அகலக்கால் வைக்கலாகாது. புதிய துறைகளில் அதிகம் பொருளை முதலீடு செய்ய வேண்டாம். கேது 4-லும், செவ்வாய் 7-லும் இருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். அலைச்சல் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். ஜனன கால ஜாதகப்படி யோக பலம் உள்ள தசை புக்தி நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லையென்றால் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். டிசம்பர் 23 முதல் ராகு 9-ஆமிடத்துக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவைப்படும். தொலைதூரப் பயணத்தின்போது எச்சரிக்கை அவசியம். கேது 3-ஆமிடத்துக்கு மாறுவதால் எதையும் சமாளிக்கும் சக்தி பிறக்கும். ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். அதனால் மன அமைதி கிடைக்கும். பரிகாரம்: வருடம் முழுவதும் குருவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குருவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது. வேத விற்பன்னர்களுக்கும், வேதம் பயில்பவர்களுக்கும் உதவி செய்யவும். விநாயகரை வழிபடவும்.