
எதிர்வரும் ஜூலை 4ம் திகதி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு கோரிக்கை மாத்திரமன்றி பல்கலைக்கழக துறைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையால் வேறு வழியின்றி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரங்ஜித் தேவப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரண்டு கல்வி அமைச்சர்கள் இருந்தும் பல்கலைக்கழக கட்டமைப்பு தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதனை அமைச்சர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காரணம் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்புக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக நிர்மால் ரங்ஜித் தேவப்பிரிய தெரிவித்தார்.












