சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகளிர் மகா வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபர் மர்ஹும் ஏ.ஸி.எம்.இப்றாஹிம் அவர்களின் சேவை மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கின்றது.( இன்று 18.6.2012) இப்பாடசாலையின் வைர விழாவை முன்னிட்டு முன்னாள் அதிபர்களை பாராட்டி கௌரவிக்கும் கௌரவப் பெரு விழா இடம்பெறுகின்றது)
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகளிர் மகா வித்தியாலயத்தை 01. 04. 1952ஆம் ஆண்டு ஆரம்பித்து அதன் ஸ்தாபக அதிபராக இருந்ததுடன் 01.04.52 முதல் 01.07.53 வரையும் , 01.05.58 முதல் 01.02.66 வரையும் மீண்டும் 17.12.74 முதல் 01.08.84 வரையும் மூன்று தடவைகள் இப்பாடசாலைக்கு 18 வருடங்கள் அதிபராகவிருந்து இப்பிரதேச கல்வித்துறைக்கு பாரிய சேவையாற்றியுள்ள மர்ஹும் ஏ.ஸி.எம்.இப்றாஹிம் அவர்கள் சாய்ந்தமருது மர்ஹும் மீராலெவ்வை காதர்லெவ்வை மரைக்கார் தம்பதிகளின் 5வது புதல்வனாக 1926.09.25 ஆம் பிறந்தார். பாடசாலை கல்வியை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் பெற்றார். 1944 இல் சிரேஷ்ட பாடசாலை தராதரப் பத்திர பரீட்சையில் சித்தியடைந்து 1945 ஆம் ஆண்டு ஆசிரியர் கலாசாலை பிரவேச பரீட்சையில் தேறி 1953 இல் திருமண பந்தத்தில் இணைந்து தனது 19வது வயதில் ஆசிரியர் தொழிலில் காலடி எடுத்து வைத்தார்.
சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து முதன் முதலாக ஆசிரியர்கலாசாலைக்கு, மர்ஹும் ஏ.ஸி.எம்.இப்றாஹிம் உட்பட எம்.ஸி.ஏ.ஹமீட் மற்றும் ஏ.எல்.எம்.மொஹிதீன் ஆகியோர் சென்று சாய்ந்தமருதில் பிறந்தவர்களில் முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக 1946. 12. 31 ஆம் திகதி வெளியேறினோர்கள். இதில் பெருமை என்னெவென்றால் இந்த மூவருமே இப்பாடசாலைக்கு அதிபர்களாக கடமையாற்றியுள்ளார்கள்.
முதலாவது ஆசிரியர் தொழிலை மிகவும் கஸ்டமான பிரதேசமான திருகோணமலை குறுஞ்சாக்கேணி அமுக வித்தியாலயத்தில் ஆரம்பித்து அப்பிரதேச மக்கள் கல்வியில் விழிப்புணர்ச்சி பெற அயராது பாடுபட்டார்.கல்வியை இடையில் விட்டிருந்த பலர் இவரின் முயற்சியினால் மீண்டும் கல்வியினை தொடர்ந்தனர்.இன்றும் கிண்ணியா பிரதேச மக்களால் இவரின் சேவை நினைவு கூறப்படுகின்றது.
தனது சேவையினை கல்முனைக்குடி மக்களும் பெற வேண்டும் என்ற காரணத்தினால் அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் தனது ஆசிரியர் சேவையினை தொடர்ந்த அவர் அப்பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்எம். அஸ்றப்பின் வகுப்பாசிரியராக இருந்த இவர் அஸ்றப்பிடம் காணப்பட்ட திறமை காரணமாக தனது மூத்த புதல்வனுக்கு அஸ்றப் ( ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்) என்ற நாமமிட்டு அழகுபடுத்தினார்.
1952 ஆம் ஆண்டு சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தை கேட் முதலியார் மர்ஹும் எம்.எஸ். காரியப்பருடன் இணைந்து ஆரம்பித்து சாய்ந்தமருது தென் பகுதி மக்களின் கல்வி வளர்ச்சியில் தனது பங்களிப்பை செலுத்தினார். தான் இறுதியாக ஓய்வு பெறும் போதும் இப்பாடசாலையில் இருந்தே ஓய்வும் பெற்றார்.
மர்ஹும் ஏ.ஸி.எம்.இப்றாஹிம் அதிபரின் சேவையினை 13ஆம் கொலணி அமுக வித்தியாலயம் , குருநாகல் பக்மீகொல்ல அல் மினா வித்தியாலயம் , சம்மாந்துறை தேசிய பாடசாலை , அக்கரைப்பற்று ஆயிசா பாளிகா மகா வித்தியாலயம் ( இவரின் காலத்திலேயே இப்பெயர் சூட்டப்பட்டது) , அக்கரைப்பற்று அல் ஹிதாயா வித்தியாலயம் , சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலயம் , கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆகிய பாடசாலைகள் பெற்றுக் கொண்டன.
1953 ஆம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் நிருவாக சபை உறுப்பினராகவும் , கிழக்கு மாகாண கிளை , கல்முனை மாவட்ட கிளை என்பவற்றின் செயலாளராகவும் , பின்னர் 25 வருடங்கள் தாய்ச்சங்கத்தின் பொருளாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
எமது பிரதேசத்தில் சம காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்களுள் மர்ஹும் ஏ.ஸி.எம்.இப்றாஹிம் ஒரு காத்திரமான பாத்திரமாக திகழ்ந்தார் என்பதனை எவரும் மறக்க முடியாது . அமைதியான போக்குடையவராகவும் ஆழமான சிந்தனையுடையவராகவும் வெற்றிகளைக் கண்டு ஆர்ப்பரிக்காதவராகவும் , வேதனையை தாங்கிக் கொள்கின்ற இதயம் படைத்தவராகவும் , இழப்புகளைக்கண்டு மனம் தளராதவராகவும் வாழ்ந்தார். எல்லாம் இறைவனின் நாட்டப்படி திட்டமிட்டபடியே நடக்கின்றன என்பதில் அவர் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார்.
அவர் இந்த உலகத்திற்கு தனது செல்வங்களான முஹம்மது அஸ்றப் ( ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் ,முஹம்மது அஸ்ஹர் ( கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆசிரியர் ) , முஹம்மது அஜ்வத் ( புள்ளிவிபரவியல் உத்தியோஸ்தர்) ஆகிய புதல்வர்களையும் மர்ஹுமா பௌசியா இப்றாஹிம் , றிபாயா பளீல் , நௌபியா பாறூக் ஆகிய புதல்விகளையும் விட்டு 1991.3.13 ஆம் திகதி இறைவனடி எய்தினார் அன்னாரின் ஜனாசா மல்வான றக்ஸபான ஜும் ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.












