கோவில் போரதீவு கண்ணகியம்மன் ஆலய திருக்கல்யாண நிகழ்வு

(கிருஸ்ணா)

கிழக்கிலங்கையில் வைகாசிப்பூரணையொட்டி பல்வேறு கண்ணகியம்மன் ஆலயங்களின் திருச்சடங்குகள் ஆரம்பமாகி கோலாகலமாக இடம்பெற்றுவருகின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இந்த கண்ணகியம்மன் ஆலயத்தின் திருச்சடங்குகள் இடம்பெற்றுவருகின்றன.

கடந்த காலங்களின் யுத்தத்தின் கோரப்பிடியில் இருந்து படுவான்கரை பிரதேசத்தின் சிறப்பு மிக்கதும் சுமார் 200 ஆண்டுகள் பழமையானதுமான கோவில்போரதீவு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கு சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனிச்சிறப்பு மிக்க பூசை முறைகளையும் வழிபாட்டு முறைகளையும் உள்ளடக்கியதாக இந்த திருச்சடங்குகள் நடத்தப்பட்டுவருகின்றன.

கோவலனை பாண்டிய மன்னன் இரண்டாக பிளந்து மரண தண்டனை விதித்தபோது சிவபெருமான் அவனுக்கு மீள உயிர்கொடுக்கும் நிகழ்வை தற்போதும் அனுஸ்டிக்கும் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நேற்று ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து கோவலனுக்கும் கண்ணகிக்கும் இடையிலான திருமண நிகழ்வை குறிக்கும் நிகழ்வான திருக்கல்யாண நிகழ்வு கோலாகலமாக இன்று இடம்பெற்றது.

இதன்போது அலங்கரிக்கப்பட்ட பந்தலில் உள்ள கண்ணகி சிலைக்கு ஆலய பிரதம குரு தன்னை கோவலனாக கொண்டுமு தாலியை கட்டி இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றது.

அதனையடுத்து ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் அம்பாள் இருந்தப்பட்டு சிறுமிகள் அதனை தாலாட்ட திருவூஞ்சல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.