காத்தான்குடியைச் சேர்ந்தவர் சவூதி அரேபியாவில் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

பு.சசிகரன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞரொருவர் சவூதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.


புதிய காத்தான்குடி விடுதி வீதி 5ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த பதுர்தீன் முகம்மது நிப்றாஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
இவ் இளைஞர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தார்.

ஜித்தா நகரிலுள்ள ஹோட்டலொன்றில் பணியாற்றிவந்த இவர், அக்ஹோட்டலின் 5ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் கூறினர்.

சடலம் ஜித்தா நகரிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.