வீரமுனைப்படுகொலையின் 22ஆவது ஆண்டு நினைவுதினம் நாளை

(கிருஸ்ணா)

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை படுகொலையின் 22வது ஆண்டு நினைவுதினம்  நாளை ஞாயிற்றுக்கிழமை அனுஸ்டிக்கப்படுகின்றது.

1990-8-12 ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இன அழிப்பின் உச்சமாக 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் 22 ஆவது ஆண்டு நிறைவு  அனுஸ்டிக்கப்படுகின்றது.

அந்த துர்ச் சம்பவத்தை நினைவு கூர்ந்து வீரமுனை மக்கள் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயச் சந்தியில் நினைவுத் தூபியொன்றை அமைத்துள்ளனர்.

1954 முதல் 1990 வரை இதே வீரமுனை மக்கள் பல காரணிகளாலும் இம்சைப்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் 1990 ஆண்டு காலத்தில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காணமல் போயிருந்தனர்.

1990-8-12 ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வளத்தாப்பிட்டி,மல்வத்தை,மல்லிகைதீவு,வீரச்சோலை ஆகிய பிரதேச மக்களில் இருந்துவந்து தஞ்சமடைந்திருந்த சுமார் 55பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பில் பல விசாரணைகள் நடைபெற்ற போதும் அது குறித்து சரியான விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை. அத்துடன் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவோ இல்லை.

இதே போல் மட்டக்களப்பின் சத்துருக்கொண்டான், உள்ளிட்ட பல இடங்களில் படுகொலைகள் நடைபெற்றதுடன். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம், சித்தாண்டி முருகன்; ஆலயம் போன்ற இடங்களிலிருந்த அகதி முகாம்கள் சுற்றிவளைக்கப்பட்டு பெருந்தொகையானோர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.