போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளி காரணமாக 73 வீடுகள் சேதம்

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் இரவு வீசிய சுழல் காற்றுக்காரணமாக சுமார் 73 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு ஆலயமும் சேதமடைந்துள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட ஆனைகட்டியவெளி, பலாச்சோலை,பாலையடிவட்டை ஆகிய பகுதிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.

ஆனைகட்டியவெளி மற்றும் பலாச்சோலை பகுதிகளிலேயே அதிகளவான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இப்பகுதியில் முற்றாக 21 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 52 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த சம்பவம் காரணமாக மூன்று வயது குழந்தையொன்றும் காயமடைந்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற பிரதேசமான இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலான விபரங்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக கூடாரங்கள் மற்றும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

முழுமையாக வீடுகள் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கான தற்காலிக கூடாரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் இன்பராஜா தெரிவித்தார்.

இதேவேளை சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களான கோவிந்தன் கருணாகரம்(ஜனா), வி.ஆர்.மகேந்திரன்,நடராசா(நடா),குணம் ஆகியோர் சேதங்களை பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடினர்.