தேர்தலை ஒட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான அலுவலகம் திறப்பு

(கிருஸ்ணா)

எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலை ஒட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான அலுவலகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் பழைய பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இந்த அலுவலகம் மக்களின் நன்மை கருதி திறந்துவைக்கப்பட்டது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களின் நன்மை கருதி இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வேட்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளரும் பெற்றோலியத்துறை அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வேட்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினரின் அலுவலகம் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அலுவலகமாக இது செயற்படவுள்ளது.