பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது என உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏனைய அரச உத்தியோகத்தர்களுடன் ஒப்பிடுகையில் போதுமான அளவு விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் சம்பள உயர்வு பிரச்சினைக்கு உரிய தீர்வு வரும் வரையில் பணிப்பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை எனவும் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து, ஒரு மாத காலம் கடந்துள்ள போதிலும் இதுவரை எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை. மொத்தமாக பார்த்தால் இலங்கை பல்கலைக்கழகங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.(கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை உட்பட)எனினும் சில பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் கிழக்கு பல்கலைகழகம் மாத்திரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.













