தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் ஆயுதப் போராட்டத்திற்கு மக்களை பலிகொடுப்பார்களா எனக் கேட்கின்றனர். இளைஞர் யுவதிகளை தவறாக வழிநடத்தி அவர்களை பலிக்கடாவாக்கியவர்கள் தான் இன்று வெற்றிலைச் சின்னத்தில் வாக்கு கேட்கின்றனர் என கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சோ.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,ஆரையம்பதி பரமநயினார் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத்தொடர்ந்து ஆலய பரிபாலனசபை தலைவர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றும். அரசின் எதிர்பார்ப்பிற்கு மாறாகவே கள நிலைமை உள்ளது. முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிக்கும் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குமே வாக்களிப்பர். இதற்கு வழிவகுத்தது இலங்கை அரசாங்கமே.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உரிமைகளை வழங்கி அவர்களை இந்நாட்டு பிரஜைகளாக நடத்த இலங்கை அரசு தயாராக இல்லை. இந்த உண்மை நிலையை தமிழ் முஸ்லிம் மக்கள் முழுமையாக புரிந்துகொண்டுள்ளனர். சிங்களவர்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு வாக்களிப்பர். தமிழ் முஸ்லிம் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள அரசாங்க கட்சியால் கூடிய பிரதிநிதிகளை பெறவோ ஆட்சியமைக்கவோ முடியாது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் ஆயுதப் போராட்டத்திற்கு மக்களை பலிகொடுப்பார்களா எனக் கேட்கின்றனர். இளைஞர் யுவதிகளை தவறாக வழிநடத்தி அவர்களை பலிக்கடாவாக்கியவர்கள் தான் இன்று வெற்றிலைச் சின்னத்தில் வாக்கு கேட்கின்றனர்.
நானோ அல்லது என் சார்ந்த தமிழரசுக் கட்சியோ ஆயுதப்போராட்டத்தை நடத்தவில்லை. எங்கள் வழி அகிம்சையும் ஜனநாயகமுமே. தந்தை செல்வா, அண்ணன் அமிர்தலிங்கம், அண்ணன் இராஜதுரை போன்ற அகிம்சைவாதிகளின் பாசறையில் வாழ்ந்தவன் நான். எத்தகைய அடிதடி அடாவடித்தனங்கள் என்மீது பிரயோகிக்கப்பட்டாலும் என் வழி அகிம்சையும் ஜனநாயகமுமே. ஜனநாயக தேர்தல் மூலம் மக்கள் பங்களிப்புடன் எமது சுயாட்சிக்கான போராட்டம் தொடரும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சியமைத்தால் என்ன செய்வார்கள் எனக் கேட்கின்றார்கள். நாங்கள் ஆட்சியமைக்கின்றபோது தமிழ்த் தேசியப் போராட்டத்தில் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியையும் சர்வதேசத்தையும் கோருவோம்.
வடக்கு கிழக்கு இணைந்த தாயகமே எமக்குத் தேவை எனக் கிழக்கு மாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றுவோம். வெளிநாடுகள் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக வழங்குகின்ற நிதியுதவிகளை எமக்கு நேரடியாக வழங்குமாறு கோருவோம்.
ஊழலற்ற வகையில் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வோம். கிடைக்கின்ற நிதியை திட்டமிட்டவகையில் பயன்படுத்தி அரச திறைசேரிக்கு மீண்டும் பணம் திருப்பிச் செல்வதை தவிர்ப்போம். அரசியலமைப்பு சட்டத்தின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்த முயற்சிப்போம். கடந்த கால முதலமைச்சரைப்போல ஒரு தொழிலாளியைக்கூட தன்னால் நியமிக்க முடியவில்லை என்று வாழாவிருக்கமாட்டோம்.
எமது அதிகாரத்தை பயன்படுத்த ஆளுனர் தடையாக இருப்பாராயின் நீதிமன்றத்தின் மூலம் அத் தடைகளை உடைத்தெறிவோம். எனவே தமிழ் மக்கள் அனைவரும் செப்டம்பர் 8ஆந் திகதி நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாணசபைக்கான ஜனநாயக தேர்தலில் முழுமையாக வாக்களித்து எமது ஜனநாயக போராட்டத்திற்கு வழியமைக்க வேண்டும்.
எத்தகைய தடைகள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் சகல மக்களும் தங்கள் அயலிலுள்ளவர்களையும் வலுவிழந்தோரையும் அழைத்துச் சென்று வாக்களிக்கச் செய்ய வேண்டும். வாக்களிக்காதோர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். எமது வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும்போது எமது மாகாண சபையும் பலமுடையதாக அமையும். அரசும் சர்வதேசமும் எமது கோரிக்கைக்கு செவிமடுக்க வேண்டிய நிலையேற்படும்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












