(கிருஸ்ணா)
எதிர்காலத்தில் சிறந்த கல்விச் சமுதாயத்தை உருவாக்குவதற்கும் எனது மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் உழைப்பேன். நாம் சிறந்த கல்வியியலாளர்களை உருவாக்கினால் தான் சிறந்த பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி ருத்திரமலர் ஞானபாஸ்கரன் தெரிவித்தார்.
அண்மையில் மட்டக்களப்பு,புன்னைச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
என்னிடம் வரும் பெண்கள், இளைஞர், யுவதிகளின் நிலை, அவர்களின் வாழ்வாதாரம், குடும்ப வருமானம், இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்புகள், என்பவற்றை கருத்தில் கொண்டே நான் இத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
இன்று க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர், யுவதிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது. யுத்தத்தில் பல பெண்கள் கணவனை இழந்திருக்கின்றார்கள், பிள்ளைகளை இழந்திருக்கின்றார்கள், சகோதரர்களை இழந்திருக்கின்றார்கள், பெற்றோரை இழந்திருக்கின்றார்கள். அவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது. அவர்களுக்கு உதவி செய்வதற்கு என்னிடம் பணமோ அதிகாரமோ இல்லை. இவர்களுள் என்னுடன் தொடர்பு கொண்டு உதவி கோரிய பலருக்கு நான் கருணா அம்மானுடன் இணைந்து பல உதவிகளை செய்திருக்கின்றேன். தொழில் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றேன்.
33வருட யுத்த காலத்தில் எமது பிள்ளைகள் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் தான் தங்கள் கல்வியை முடித்தார்கள். அன்று மின்சாரமில்லை. குடிசை வீடுகளில் மிகவும் அச்சத்தின் மத்தியில் தங்களது வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஒரு சிறிய தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கும் பெருமளவிலான பணத்தை செலவுசெய்து தொழில் வாய்ப்புகளை பெற்றர்கள். இந்த நிலையில் தான் கருணா அம்மான் அவர்கள் என்னை தனது செயலாளராக நியமித்தார்.
நான் பணத்திற்காகவோ பதவிக்காகவோ இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனது மாவட்ட மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் இளைஞர், யுவதிகளுக்காகவும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
எதிர்காலத்தில் சிறந்த கல்விச் சமுதாயத்தை உருவாக்குவதற்கும் எனது மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் உழைப்பேன். நாம் சிறந்த கல்வியியலாளர்களை உருவாக்கினால் தான் சிறந்த பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். இனிவரும் காலங்கள் இளைஞர், யுவதிகளின் கைகளில் தான் தங்கியிருக்கின்றது.
இளைஞர், யுவதிகள் இது பற்றி சிந்திக்க வேண்டும். தங்களுக்கு அடுத்துவரும் சமுதாயங்களை சிறந்த முறையில் வழிநடத்த வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அந்த நோக்கத்தை அவர்கள் மத்தியில் உருவாக்குவதற்கு அவர்களை ஒரு கௌரவமான நிலையில் வைக்க வேண்டும். அப்போது தான் சமூகம் அவர்களை மதிக்கும்.
பலர் இந்த தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் எல்லோருக்கும் உங்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்காது. பொதுநல சிந்தனை இருக்காது. ஆகவே மக்களில் பற்றுள்ள பிரதேசத்தில் பற்றுள்ள ஒருவரை நீங்கள் இத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து முதலமைச்சராக்கவேண்டும்.
சிந்தித்து வாக்களித்து ஒரு நல்ல தலைமையை உருவாக்க வேண்டும்.
இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் கலந்துகொண்டார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












