கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் ஒரு பார்வை

(கிருஸ்ணா)

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கிழக்கு மாகாண சபை தேர்தலின் மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மத்திய கல்லூரி மற்றும் வின்ஸ்ட் உயர் தேசிய மகளிர் பாடசாலை என்பவற்றில் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று சனிக்கிழமை இரவு 8.00மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது மட்டக்களப்பில் நான்கு தொகுதிகளாக இடம்பெற்ற அஞ்சல் வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளுக்கான வாக்கும் எண்ணும் பணிகள் இடம்பெற்றன.

இதனடிப்படையில் கல்குடா தேர்தல் தொகுதி,மட்டக்களப்பு தேர்தல் தொகுதி,பட்டிருப்பு தேர்தல் தொகுதிகள் தனித்தனியாக எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் மட்.வின்ஸ்ட் உயர் தேசிய மகளிர் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் அலுவலகத்தில் இருந்து தெரிவத்தாட்சி அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி;.எம்.சார்ள்ஸினால் உடனுக்குடன் வெளியிடப்பட்டன.

இதனடிப்படையில் கல்குடா தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 22968 வாக்குகளைப்பெற்றதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு 21876 வாக்குகளைப்பெற்றுக்கொண்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8604 வாக்குகளையும் ஐ.தே.கட்சி 1014 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.

அத்துடன் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 34705 வாக்குகளைப்பெற்றது.ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 8603 வாக்குகளைப்பெற்றது.

இதேபோன்று மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 44863 வாக்குகளைப்பெற்றதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 31194 வாக்குகளைப்பெற்றுக்கொண்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13964 வாக்குகளைப்பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைபொறுத்தவரையில் 03 இலட்சத்து 44 ஆயிரத்து 99பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளநிலையில் 22,3159 வாக்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றில் 17,223 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 205936 வாக்குகள் செல்லுபடியானதாக கருதப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் 64.29 வீதம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 1,046802 வாக்குகளைப்பெற்று ஆறு ஆசனங்களைகைப்பற்றியுள்ளது.ஐக்கி மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 64,190 வாக்குகளைப்பெற்று 04 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 23,083 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

இதற்கினங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் 29,140 வாக்குகளையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் 27,717 வாக்குகளையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை என்று அழைக்கப்படும் ஞா.கிருஷ்ணபிள்ளை 20,200 வாக்குகளையும், பிரசன்னா இந்திரகுமார் 17,304 வாக்குகளையும் முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் மா.நடராசா(நடா) 16,681 வாக்குகளையும் ஜனா என்று அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் 16,536 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் 22,338 வாக்குகளையும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீரலி 21,271 வாக்குகளையும் பொறியியலாளர் சிப்லி பாரூக் 20,407 வாக்குகளையும், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் 19,903 வாக்குகளையும்  பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் பிரதி தலைவர் ஹாபீஸ் நஷீட் அஹமட் 11,401 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி 6,436 வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பட்டியலில் இரண்டாமிடத்தினை பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலின் அனைத்து மாவட்டங்களின் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 200,044 வாக்களைப்பெற்று 14 ஆசனங்களையும்,தமிழ் தேசிய கூட்டமைப்பு 193,827 வாக்குகளைப்பெற்று 11 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132,917 வாக்குகளைப்பெற்று 07 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 74901 வாக்குகளைப்பெற்று 04 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.