அலங்கார தையல் டிப்ளோமா பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் யுவதிகளின் தொழில்வாய்ப்பற்றுள்ள யுவதிகள் தொழில் முயற்சியை ஏற்படுத்துமுகமாக மேற்கொள்ளப்பட்டுவந்த அலங்கார தையல் டிப்ளோமா பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.


வவுனதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தேசிய இளைஞர்கள் சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான சசிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனதீவு பிரதேச செயலாளர் வி.தவராசா, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப்பணிப்பாளர் கபூர்,மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் கலாராணி,வவுனதீவு பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் மா.சசிகுமார்,சிறுவர் நிதியத்தின் மாவட்ட கல்வி அபிவிருத்தி திட்ட அதிகாரி சுபராஜ்,அதன் இணைப்பாளர் அலேக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இளைஞர் விவகார,திறன் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் வவுனதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து இந்த பயிற்சிநெறி நடத்தப்பட்டது.

வவுனதீவு பிரதேசத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த வறுமை நிலையில் உள்ள சுமார் 59 யுவதிகளுக்கான ஒருவருட முழுநேர டிப்ளோமா கற்கையாக இந்த பயிற்சி நெறி மேற்கொள்ளப்பட்டுவந்தது.

இதன்போது இவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வவுனதீவு பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் மா.சசிகுமார் மேற்கொண்ட முழு முயற்சி காரணமாகவே இந்த பயிற்சி நெறி இங்கு மேற்கொள்ளப்பட்டதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப்பணிப்பாளர் கபூர் தெரிவித்தார்.