
(ரிதுமிகன்) கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் வாணி விழா மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியது. கடந்த 16ஆம் திகதி தொடக்கம் தினமும் பஜனைகள், பூஜைகள் சகிதம் ஆரம்பிக்கப்பட்ட நவராத்திரி விழா இறுதி நாளான்று 'பன்மைத்துவ கலாசாரம் ஊடாக சமாதானம்' எனும் தொனிப்பொருளிலே GIZ/ESC (திருகோணமலை) யின் அனுசரணையுடன் இடம்பெற்ற நிகழ்வு கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சு.சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு.எம்.பவளகாந்தன் தொழிநுட்ப ஆலோசகர் GIZ/ESCஅவர்களும் சிறப்பு அதிதியாக திருமதி.சா.பவளகாந்தன் வலயக்கல்விப் பணிப்பாளர் மட்டக்களப்பு வலயம் அவர்களும், கௌரவ அதிதியாக திரு.தெ.சுப்பிரமணியம் ஆலோசகர் GIZ/ESC அவர்களும் கலந்து கொண்டனர். இங்கு கல்குடா வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களினால் நடனம், தாளலயம், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் சார்பில் பிரதி கல்விப்பணிப்பாளர்கள், உதவி கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்லி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என அனைவரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.












