கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்தமை தொடர்பில் தேசிய நீரியல்வள அபிவிருத்தி ஆராய்ச்சி முகாமைத்துவ நிறுவனமான நாரா ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
அந்த பிரதேசத்தின நீர் மாதிரிகள், இறந்த மற்றும் உயிருடனான மீன்களின் மாதிரிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிப்பாளர் கலாநிதி கே.அருளானந்தன் கூறினார்.
எவ்வாறாயினும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கரையொதுங்கிய மீன்களில் நச்சுப் பதார்த்தங்கள் எதுவும் கலந்திருப்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலுத் கருத்து வெளியிட்ட கலாநிதி கே.அருளானந்தன்:- பொதுவாக ஆழ்கடலில் மையம் கொண்டுள்ள குளிர்நிலை கரையை நோக்கி நகர்கிறது. நீரோட்டமும் அதற்கு சாதகமாக அமைந்தததோடு தாவர நுண்ணுயிர்கள் வளர்ச்சியடைந்திருந்தன. சிறிய மீன்கள் அதனை சாப்பிடுவதோடு பெரிய மீன்கள் சிறிய மீன்களை உட்கொள்கின்றன. ஆனால் அதில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. நுண்ணுயிர் தாவரங்கள் நீரில் அதிகம் காணப்பட்டமையினால் அதிகளவான ஒட்சிசன் தேவைப்படுகிறது. இதனால் நீரிலுள்ள ஒட்சினின் அளவு குறைவடைந்தது. மேலும் இந்த நுண்ணுயிர் தாவரங்களின் ஆயுற்காலம் மிகவும் குறுகியது என்பதனால் அவை இறந்து நீரின் அடியில் படிகின்றன. அவை பிரிகையடையும் போது நீரிலுள்ள ஒட்சிசனை அவை உள்ளெடுக்கும் நீரில் உள்ள ஒட்சிசனின் அளவு மேலும் குறைவடைய ஆரம்பிக்கும் அதன் காரணமாக மீன்களுக்கு தேவையான ஓட்சிசன் போதியளவில் கிடைக்கப் பெறாமை காரணமாக மீன்கள் இறக்கின்றன எனக் குறிப்பிட்டார்.













