சொற்சிற்பி இ.சபா எழுதிய “இப்படிக்கு இதயம்” நூல்வெளியீட்டு நிகழ்வு – battinews க்கும் புகழாரம்

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு,செட்டிபாளையம் சொற்சிற்பி இ.சபா எழுதிய “இப்படிக்கு இதயம்” நூல்வெளியீட்டு நிகழ்வு இன்று செட்டிபாளையத்தில் இடம்பெற்றது.

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் விபுலானந்தர் மண்டபத்தில் இந்த நூல் வெளியீட்டு விழா கோலாகலமாக இடம்பெற்றது.

இலட்சியம் வெளியீட்டகத்தின் அனுசரனையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு வெளியீட்டகத்தின் செயற்படுத்துனர் விஸ்வஜித்தன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர் சி.மனோகரன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய செயலாளர் ஓ.கே.குணநாதன், சிரேஸ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான ஏ.நிசாந்தன், சிரேஸ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளரும் கவிஞருமான எஸ்.முகுந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் நூல் வெளியீட்டை சிறப்பிக்கும் வகையில் இலட்சியம் வெளியீட்டகத்தின் இலட்சிய தீபம் ஏற்றிவைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தலைமையுரையினை எழுத்தாளர் அழகுகிருபா நிகழத்தியதுடன் நூல் வெளியீட்டை நூலாசிரியர் ‘சொற்சிற்பி’ இ.சபா பிரதம அதிதிக்கு வழங்கிவைத்து ஆரம்பித்துவைத்ததுடன் தொடர்ந்து அதிதிகளுக்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நூலின் நயவுரையினை இலக்கிய ஆய்வாளரும் ஊடகவியலாளருமான ஜெஸ்மின் மூசாh நிகழ்த்தியதுடன் ஏற்புரையினை நூலாசிரியர் இ.சபா நிகழ்த்தினார்.

இறுதியாக நூலாசிரியர் சிரேஸ்ட ஊடகவியலாளரான முகுந்தனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சிரேஸ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான ஏ.நிசாந்தன் இலங்கையில் பல்வேறு ஊடகங்கள் செயற்பட்டுவந்தபோதும் battinews இணையத்தளம் மூலம் கலைஞர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் பணிகள் பாராட்டத்தக்கது.

இன்று புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்கள் எமது மாவட்டத்தில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளையும் கண்டுகளிக்கும் வகையில் அவர்களது இணையத்தளம் சிறந்தமுறையில் தகவல்களை வழங்கிவருகின்றது.

அவர்களுக்கு அனைவரது சார்பிலும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.