சுவாமி விபுலானந்தா அழகியல்கற்கைகள் நிறுவகத்தின் உணவு விடுதியில் பெருமளவு பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்பு

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்துக்குட்பட்ட நாவற்குடா சுகாதார பிரிவில் உள்ள பகுதியில் இன்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல்கற்கைகள் நிறுவகத்தின் உணவு விடுதியில் இருந்து பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை மீட்டுள்ளனர்.

இன்று நாவற்குடா பொதுச்சுகாதார பரிசோதகர் செனவிரட்ன தலைமையில், வா. ரமேஸ்குமார், பி. முருகதாஸ், வெ.டி.ராகல், வி.ரி.சகாயதேவராஜ், ரி.மணிமாறன் கே. ராஜ்குமார்,  ஆகியோர் கொண்ட பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவும், மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சர் காரியாலய பொலிஸாரும் இணைந்து இந்தத் தேடுதலில் ஈடுபட்டனர்.

நாவற்குடா பிரதேசத்தில் உள்ள திணைக்களங்கள்,பாடசாலைகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல்கற்கைகள் நிறுவகத்தின் உணவு விடுதியில் இருந்து பெருமளவான பாவனைக்குதவாத பொருட்களை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியதுடன் அதனை நடத்திவருபவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார் தெரிவித்தார்.

இந்த சோதனையின் போது சுவாமி விபுலானந்தா அழகியல்கற்கைகள் நிறுவகத்தின் சில பகுதிகளில் நுழம்பு பெருக்கத்துக்கு ஏதுவான முறையில் சூழலை வைத்திருந்ததன் காரணமாக அதன் நிர்வாகத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று நாவற்குடாவில் உள்ள நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் அலுவலக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது அப்பகுதியில் அதிகளவிலான டெங்கு நுழம்பை உற்பத்திசெய்யக்கூடிய குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் வா.ரமேஸ்குமார் தெரிவித்தார்.

இதன் காரணமாக குறித்த அலுவலகத்தின் அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு நுழம்பின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அதன் காரணமாக நுழம்பு பெருக்கத்துக்கு ஏதுவான இடங்கள் கண்டுபிடிக்கப்படும் இடத்து அதன் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.