இலங்கையில் முதன் முறையாக பரிசோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கிய டாக்டர் அருளானந்தராஜா காலமானார்

(கிருஸ்ணா)

பரிசோதனைக் குழாய் குழந்தையை இலங்கையில் முதன் முறையாக உருவாக்கிய மகப்பேற்று நிபுணர் டாக்டர் அருளானந்தராஜா கொழும்பில் காலமானார்.

முதற் தடவையாக இலங்கையில் பரிசோதனைக் குழாய் குழந்தையை உருவாக்குவதில் வெற்றிகண்ட மகப்பேற்று நிபுணர் வே. அருளானந்தராஜா என்பவரே கொழும்பில் 62 வது வயதில் காலமானார்.

இவரின் நெறிப்படுத்தலில் 8 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவின் தீவிர முயற்சியால் 1999 நவம்பர் 10ம் திகதி கொழும்பு நியூலங்கா ஹொஸ்பிட்டலில் முதலாவது பரிசோதனைக் குழாய்க் குழந்தை பிரசவமானது.

இது வைத்திய வட்டாரத்தில் சாதனையாகக் கருதப்பட்டது.

மகப்பேற்று நிபுணரான டாக்டர் அருளானந்தராஜா மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றில் பிறந்து, பெரியகல்லாற்றில் மணம் முடித்து கொழும்பை வசிப்பிடமாக கொண்டவராகும்.

மகப்பேற்று நிபுணராக பிரபல்யம் பெற்றிருந்ததுடன் மகப்பேற்றுக்கான சிகிச்சை விடுதியை நியூலங்கா ஹொஸ்பிட்டல் என்ற பெயரில் நடாத்தி வந்தவராகும்.

இவரது நல்லடக்கம் கனத்தை மயானத்தில் ஞாயிறன்று நடைபெற இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.