மிதுனம் - 2013 புது வருட ராசி பலன்


மிதுனம்

மிதுனம்:திடீர் பணவரவு உண்டாகும்

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும்
தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். இந்த ஆண்டு, உங்களின் அயன சயன மோட்ச ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவானால் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு நல்ல
இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். ஸ்திர ராசியில் வலுப்பெற்று சஞ்சரிக்கும் குரு பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும்.

பங்குச் சந்தை போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். இந்த ஆண்டு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்களின் ஆன்மிக நாட்டத்தை அதிகப்படுத்துவார். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். இவை ஒருபுறமிருக்க, இந்த ராசி நேயர்கள் பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். பூர்வபுண்ணிய பஞ்சமஸ்தானத்தில் ராகு பகவான் சனியுடன் சஞ்சரிப்பதால் தனித்து நின்று போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பதற்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிக்க சனி பகவான் உதவுவார்.  உங்களின் பூர்வபுண்ய புத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று, சஞ்சரிக்கிறார் சனி பகவான். இதனால் உங்களுக்கு பேராற்றல் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உறவினர் உங்களுக்கு உதவியாக நடந்து கொள்வார்கள். நல்ல
செய்திகள் உங்களை வந்தடையும். உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். இதனால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம்.

எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும்.  உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். லாப ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும்.  புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம். விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது; அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். புழு,
பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கும் சிறு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும் கௌரவமும் கிடைக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நிறைவேற்றி, அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள்.
நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள்.



சொல்ல வேண்டிய மந்திரம்: 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் அன்றாடம் பாராயணம் செய்யுங்கள்.

மலர் பரிகாரம்: 

அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் மகாலட்சுமிக்கு, மரிக்கொழுந்தை சாத்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.