கன்னி - 2013 புது வருட ராசி பலன்


கன்னி

கன்னி:ஆளுமைத் திறன் அதிகரிக்கும்

‘‘கன்னியான் ஏய்க்கப்படு வான்’’ என்பதற்கேற்ப யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர் நீங்கள். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும்.இந்த வருடத்தில் குரு பகவான் உங்களின் பாக்கியஸ்தானத்தில் ராசியில் சஞ்சரிக்கிறார். பொதுவாக குரு பகவான் பாக்கிய ராசியில் சஞ்சரிப்பது சிறப்பு என்பதே பொது விதி. அந்த குரு பகவான், சுக ஸ்தானம், களத்ர ஸ்தானம் என்கிற கேந்திர ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, கேந்திராதிபத்ய தோஷம் பெற்றாலும் பாக்கியத்தையும் தருகிறார். இதனால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். 


இது ‘ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு’ என்கிற விதியின்படி அமைகிறது. இந்தக் காலகட்டத்தில் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வது நலம் பயக்கும். சில அன்பர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதே நேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும். தனவாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியுடன் இருக்கும் ராகு பகவானால் ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பீர்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக்கொள்வீர்கள். 

பூர்வீகச் சொத்துகளில் திடீரென்று பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீரும். தீயவர்கள் உங்களை விட்டு தாமாகவே விலகி விடும் அதிசயம் நிகழும். சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள். இந்த ஆண்டு ஆயுள்ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். உங்கள் புகழும், கௌரவமும் உயரும். இது நாள் வரை தேவையற்ற வீண் பழி சுமந்த சிலர், அவற்றிலிருந்து விடுபடுவார்கள். உங்களின் முயற்சிகள் பல மடங்காக உயர்ந்து, அதற்கேற்ற வெற்றி கிடைக்கும். தனஸ்தானத்தில் இருக்கும் சனி பகவானால் 
உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.  உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் கொள்முதல் பொருட்களை விற்று நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். புதிய நிலங்களை வாங்குவதற்குக் கடன் கிடைக்கும். 

அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். 

சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மிக பலம் பெறுவீர்கள். மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.

பரிகாரம்: 

தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் வியாழக்கிழமைகளில் 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலைகள் இரண்டை குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்துப் பலன் பெறுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

புருஷ சூக்தம் பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்: 

துளசி மாலையை பெருமாளுக்கு சாத்திவர வாழ்வில் புத்தொளி பிறக்கும்