துலாம் 2013 புது வருட ராசி பலன்


துலாம்

துலாம்:குடும்ப ஒற்றுமை மேம்படும்

‘துலாத்தான் எங்கும் உண்டு’ என்பதற்கேற்ப எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் துலா ராசி அன்பர்களே, நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர். இந்த ஆண்டில் உங்களின் அஷ்டம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படாது. குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். எப்போதும் போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும்.

இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். அதேசமயம் கடினமாக உழைக்க வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. உடலில் இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இந்த ஆண்டு உங்களின் ராசியில் சனியுடன் சஞ்சரிக்கும் ராகு பகவானால் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள். பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். ஸ்பெகுலேஷன் துறையில் நல்ல வருமானம் வரும். பெற்றோர் வழியில் நிலவி வந்த மனக்கஷ்டங்கள் தீர்ந்து, குடும்பத்தில் குதூகலம் நிறையும்.

உங்களின் சப்தம ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவானால் நீங்கள் பல தரப்பட்ட மனிதர்களையும் சந்திப்பீர்கள். இதன் மூலம் நீங்களும் பிரபலம் ஆவீர்கள்.  இந்த ஆண்டு ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.  சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது.

எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள். வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்குக் கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். அரசியல் வாதிகளுக்குப் பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.  கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்களின் முயற்சிகளை எதிர்க்கட்சியினரும் பாராட்டுவார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ராசியில் அமர்ந்துள்ள உச்சம் பெற்ற புத்தி ஸ்தானாதிபதியாகிய சனி பகவானால் உங்களின் கற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மிகச் சுற்றுலாவும் இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.

பரிகாரம்: 

அறுபடை வீடுகளில் அருளும் முருகப் பெருமானை வழிபட்டு வரவும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நலம் தரும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

‘ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்கிற மந்திரத்தையோ அல்லது  ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தையோ தினமும் சொல்லவும்.

மலர் பரிகாரம்: 

எலுமிச்சை கனியைப் பிழிந்து சாறு எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யக் கொடுங்கள். வாழ்வில் வசந்தம் வீசும்.