போரதீவுப்பற்றில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

(கிருஸ்ணா)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் திவிநெகும தேசிய திட்டத்தின் கீழான உதவி வழங்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கடந்த கால யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை நோக்காகக்கொண்டு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தியமைச்சின் வழிகாட்டலில் கிராமிய அபிவிருத்தி வங்கி மூலம் வறுமை நிலையில் உள்ள யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமையாளர் சந்தானம்,மட்டக்களப்பு கிராமிய அபிவிருத்தி வங்கி முகாமையாளர் சத்தியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது போரதீவுப்பற்றின் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 38 பயனாளிகளுக்கான சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

போரின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதனோடு இணைந்ததாக வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களும் அரசினால் பூர்த்திசெய்யப்பட்டுவருவதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தெரிவித்தார்.