இனங்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் திட்டத்தின்கீழ் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தியமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இனங்களுக்கு இடையே பரஸ்பர நட்புறவை பரிமாறிக்கொள்ளும் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குருநாகல் மாவட்டத்தினைச் சேர்ந்த சிங்கள இளைஞர் யுவதிகள் ஐம்பது பேர் கொண்ட குழு ஒன்று மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட எருவில் பிரதேசத்துக்கு விஜயம்செய்து அக்கிராம மக்களுடனான இன ஐக்கிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த இளைஞர் யுவதிகளை வரேவேற்கும் நிகழ்வு எருவில் கண்ணகியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.
தமிழர்களின் கலாசாரங்களைக்கொண்ட ஆடைகளை அணிந்து அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
ஐந்து தினங்கள் இப்பகுதியில் தங்கிருக்கும் இவர்கள் இப்பகுதி மக்களின் கலை காலாசார பண்பாட்டு, அம்சங்களை பகிர்ந்து கொள்வதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மதஸ்தலங்கள் சுற்றுலா தலங்கள் மற்றும் மாவட்டத்தின் முக்கியமான இடங்களுக்கும் செல்லவுள்ளர்.
இந்த இளைஞர் யுவதிகள் எருவில் பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வீடுகளில் தங்கியிருந்து இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில் நிழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா உட்பட இளைஞர்சேவைகள் மன்ற உத்தியோகஸ்தர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் வரவேற்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு வரவேற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.












