மகிழவெட்டுவான் கிராமத்தை சேர்ந்த யுவதி செய்யும் சேவை - கட்டாயம் வாசியுங்கள்


மட்டக்களப்பில் மகிழவெட்டுவான் கிராமத்தை சேர்ந்த யுவதி சந்திரன் சந்திரமதி.
இவர் உயரம் கொஞ்சம் குறைந்த  ஒருவர். இவரால் நடமாட முடியாது. ஆனால் இவர் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக அற நெறிப் பாடசாலை ஒன்றை மிகவும் திறம்பட நடத்தி வருகின்றார்.



சந்திரமதி 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். எட்டாம் வகுப்புப் படிக்கும் வரை நடமாடித் திரிந்து இருக்கின்றார். ஆனால் திடீரென்று கால்கள் செயல்பட மறுத்து விட்டன. எவரேனும் இவரை சுமந்து கொண்டுதான் ஓரிடத்தில் இன்னோர் இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டது.

ஆயினும் மிகுந்த பிரயாசைக்கு மத்தியில் க. பொ. த சாதாரண தரம் வரை பயின்று சித்தி அடைந்தார். முறை சார் கல்வியை இத்துடன் நிறுத்திக் கொண்ட போதிலும் பற்பல நூல்களை படித்து அறிவை வளப்படுத்திக் கொண்டார். சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் ஆகியவற்றை சிறப்பாக எழுதுவார். மாலை கட்டுதல், குஞ்சம் அமைத்தல் போன்ற கைப்பணிகளை அற்புதமாக மேற்கொள்வார்.

இவருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு. எனவே ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை என்று அறநெறிப் பாடசாலை ஒன்றை ஸ்தாபித்தார். இதன் அதிபரும் இவர்தான். யுத்த கால இடப் பெயர்வுகளின்போதிலும் இப்பாடசாலையை விடாமல் நடத்தி வந்திருக்கின்றார்.



  இவரது அறநெறிப் பாடசாலை இந்து கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. அதிபர் சந்திரமதி தலைமையில் எட்டு ஆசிரியர்கள் அறநெறி கற்பிக்கின்றனர், 150 மாணவர்கள் வரை பயில்கின்றார்கள். இந்து கலாசார திணைக்களத்தால் மாதாந்தம் உபகார கொடுப்பனவாக வழங்கப்படுகின்ற 3000 ரூபாய்தான் இவரது வருமானம்.

இவரது பாடசாலைக்கு நிரந்தர கட்டிடம் கிடையாது. மர நிழல்கள், கோவில்கள், பாடசாலைகள், வீடுகள் என்று தற்காலிக இடங்களில்தான் அறநெறிப் பாடசாலையை நடத்தி வருகின்றார்.

இவரது அறநெறிப் பணிகளால் நெகிழ்ந்து போன நாகையா நேசதுரை என்பவர் 40 பேர்ச் காணியை அறநெறிப் பாடசாலைக்கு நிரந்திர கட்டிடம் கட்டுகின்றமைக்காக அன்பளிப்பாக கொடுத்து உள்ளார். காணியை செப்பனிடுகின்ற பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.