பல்கலைகழக மாணவர்கள் விடுதலை தொடர்பில் அனைவரும் மௌனமாக உள்ளனர் - ச.சந்திரநேரு


யாழ் பல்கலைகழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் தற்போது அனைவரும் மௌனம் காத்து வருகின்றனர். அத்துடன் பகிஸ்கரிப்பில் ஈடு பட்டு வந்த யாழ் பல்கலைகழகமும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டும் விட்டது. தை பொங்கலுக்கு முதல், கைது செய்யப் பட்ட மாணவர்கள் விடுதலை செய்ய படுவார்கள் என்று சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார், ஆனால் பொங்கல் முடிந்து ஒரு வாரத்திற்க்கு மேலும் ஆகிவிட்டது இன்னும் தடுப்பிலே உள்ளார்கள் மாணவர்கள்.


இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும், வெளி நாடுகளுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அறிக்கைகள் வெளிவந்ததே தவிர எதுவும் நடந்ததாக இல்லை. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தை பெரிது படுத்தாமல் உள்ளனர்.
  
ஏனெனில், கைது செய்யப்பட மாணவர்களுள் யாழ் தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் ஒருவரும் உள்ளார், எதிர்காலத்தில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தேர்தலில் இறங்கினால், தமது ஆசனம் பறி போய் விடும் என்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைக்கின்றார்கள் போலும்,
இதே போன்று தான் எனக்கும் கடந்த 2011 கிரீஸ் மனிதன் பிரச்சினை ஒன்றில் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் ஒன்றும் செய்யப்பட்டிருந்தது. அதனை நான் தனி மனிதனாகவே எதிர் கொண்டேனே தவிர கட்சி சார்பில் எவ்விதமான ஆதரவோ, ஆறுதலோ சொல்லவில்லை. அதே போன்ற நிலை தான் தமிழரசு கட்சி இளைஞர் அணி தலைவருக்கு ஏற்பட்டிருக்கின்றது.
அத்துடன் மாணவர்களின் கைதை எதிர்த்து இன்னுமொரு தமிழ் கட்சியும் ஆர்பாட்டங்களும் உண்ணா விரதமும், இன்னுமொரு கட்சி பேரணிகளும், கையெழுத்து போராட்டங்களும், ஏனைய பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களும் பயனற்றே போய் விட்டன.
என்னால் முடிந்தது. என் இறைவனை தினமும் பிரார்தித்துக் கொண்டே இருக்கிறேன் இவர்களின் விடுதலைக்காக, அந்த இறைவனுக்கும் கூட தமிழர் மீது இரக்கம் இல்லையோ என்னவோ தெரியவில்லை இன்றுவரை.

ச.சந்திரநேரு
தமிழரசு கட்சி மத்திய குழு உறுப்பினர்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,
அம்பாறை மாவட்டம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு.