நீண்ட கூந்தல் கொண்ட பெண்களும் இனி கவனமாக இருக்கவேண்டும் - சரத் வீரசேகர



புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் ஆங்கிலப் பிரதியில், நீண்ட கூந்தல் மற்றும் பச்சை குத்தியுள்ள நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், இனி நீண்ட கூந்தல் கொண்ட பெண்களும் கவனமாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (23) நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொலிஸார் மக்களின் பாதுகாப்பாளர்களாகச் செயற்பட வேண்டும் என்ற போதிலும், தற்போதைய பொதுப் பாதுகாப்பு அமைச்சு மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கத் தவறிவிட்டது. நாட்டில் பாதாள உலகக் கும்பல்களின் மோதல்கள் அதிகரித்து, சாதாரண மக்களின் உயிர்களும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸ் துறையைச் சரியாக வழிநடத்தக்கூடிய திறமையான தலைமைத்துவம் இன்று அரசாங்கத்திடம் இல்லை.

ஜனநாயக நாடு ஒன்றில் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு முழு உரிமையுள்ளது. அந்த உரிமை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டால் மட்டுமே பொலிஸார் தலையிட வேண்டும். கோட்டாபய ராஜபக்‌ஷ காலத்தில் கூட அவர் இவ்வாறான போராட்டங்களுக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார். எனினும், தற்போதைய அரசாங்கம் அமைதியான பேரணிகளுக்கும் பொலிஸாரை பயன்படுத்தித் தடைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் மக்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

மேலும், புதிதாக அமுல்படுத்தும் சட்டமூலத்தின் ஆங்கிலப் பிரதியில் நீளமான கூந்தல் மற்றும் பச்சை குத்தியுள்ள நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெளிவற்ற முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பிரதியில் நீண்ட முடியை கொண்ட ஆண்கள் என்று எங்கும் கூறவில்லை. எனவே பெண்களும் கவனமாக செயற்பட வேண்டும். நாட்டில் பாரிய பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் நிலவும் போது, முச்சக்கரவண்டிகள் மற்றும் பேருந்துகளின் அலங்காரப் பொருட்களைக் கழற்றுவது போன்ற சிறிய விடயங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவது, அவர்களின் ஆட்சியியல் இயலாமையையே காட்டுகிறது.

தர்ம சக்கரம் என்பது நமது நாட்டின் கலாசார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் ஒரு சின்னமாகும். அந்தச் சின்னத்தைக் பொலிஸ் சீருடையில் சேர்ப்பதன் மூலம் பொலிஸ்துறையின் பங்கு குறித்த ஒரு ஆழமான செய்தி சமூகமயமாக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சீருடையில் உள்ள தர்ம சக்கரத்தை அகற்றச் சிலர் முயல்வதும், அரசாங்கத்தின் அமைச்சர்கள் பௌத்த கலாசாரத்தையும் பிக்குகளையும் இழிவுபடுத்தும் வகையில் பேசி வருவதும் கண்டிக்கத்தக்கது.

அரசியலமைப்பின் 9ஆவது பிரிவின்படி பௌத்த மதத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை. விகாரைகளில் இருந்த சிவில் பாதுகாப்புப் படையினரை அரசாங்கம் விலக்கியிருப்பது பௌத்த எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

மேலும், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மையங்களைச் சிதைத்து, வேறு மத அடையாளங்களை மாற்றும் முயற்சிகள் நாட்டின் வரலாற்று அடையாளத்தை அழித்துவிடும்.

அத்துடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஞானசார தேரருக்கு, மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளை ஏற்றுத் தற்போதைய ஜனாதிபதி முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றிப் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என உயர் நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அரசாங்கம் இவ்விவகாரத்தை மேலும் இழுத்தடிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.