செங்கலடியில் நான்காவது தடவையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்க அதிபர் பார்வையிட்டார்!


மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது தடவையாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தங்கியுள்ள செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் இன்று பார்வையிட்டார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பாடசாலைகளிலும், பொதுக்கட்டிடங்களிலும் தங்கியுள்ளனர். இவ்வாறு பொதுமக்கள் தங்கியுள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட இடங்களை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் பார்வையிட்டதுடன் மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

மட்டக்களப்பில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மக்கள் தங்கியுள்ள சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம், வந்தாறுமூலை கணேச வித்தியாலயம், காயன்குடா கண்ணகி வித்தியாலயம் போன்ற இடங்களுக்குச் சென்ற மாவட்ட அரசாங்க அதிபர் அங்கு தங்கியிருந்த மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களுடன் இணைந்து  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களும் சென்றிருந்தனர்.