“கோச்சடிச்சி கிளி செத்திட்டாவு எனக்கு கை முறிஞ்சித்து” பாதிக்கப்பட்ட சிறுவனின் கதை!


(தீரன்)
“கோச்சடிச்சி கிளி செத்திட்டாவு எனக்கு கை முறிஞ்சித்து அம்மம்மாவோடதான் இரிக்கன் நான் நல்லா படிப்பன் ஐயா” என்று தனது கவலைகளை தனக்கேயுரிய துடிப்பான வார்த்தைகளால் விளையாட்டாக கூறிய அந்த எட்டு வயது சிறுவனின் பேச்சுக்கள் எங்களின் உள்ளுணர்வுகளை மீண்டும் மீண்டும் தட்டியெழுப்பியது.


"கிளியென்று" தன்னால் செல்லமாக அழைக்கப்பட்ட தாய் ரயிலில் தற்கொலை செய்துகொண்டதையும், அதிலிருந்து தப்பித்து அந்த சம்பவத்தின் சாட்சியாக இருக்கின்ற வேப்பவெட்டுவானைச் சேர்ந்த அந்த சிறுவன் எங்களின் மனசாட்சிகளை தட்டியெழுப்பிய கதையையே இங்கு  உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

மழை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து வேப்பவெட்டுவான் பாடசாலையில் தங்கியிருந்த காரைக்காட்டு பொதுமக்களுக்கும், அங்குள்ள சிறுவர்களுக்கும் உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளுடன் சேவகம் நிறுவனத்தினுடைய சிறுவர்களுக்கான உதவிகளுடன் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களுடன் சென்றிருந்தோம்.

கொடுவாமடு பாடசாலை, கொடுவாமடு தும்புத்தொழிற்சாலை, வேப்பவெட்டுவான் பாடசாலை போன்ற இடங்களில் வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து தங்கியிருந்த சிறுவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு முன்வந்த சேவகம் தொண்டு நிறுவனத்திடம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்கள் சிறுவர்களுக்கான உதவிகளுடன் அவர்களை மகிழ்விக்கக்கூடிய உளஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளையும் நடத்தவேண்டும் என்று விரும்பியதுடன் அந்த நிகழ்வுகளை அவரே நெறிப்படுத்தி நடத்துவதற்கும் தீர்மானித்திருந்தார்.

இதற்கமைய ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர், மற்றும் சேவகம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆகியோருடன் பயணித்த எமது குழுவினர் கொடுவாமடு பாடசாலை, கொடுவாமடு தும்புத்தொழிற்சாலை போன்ற இடங்களில் தங்கியிருந்த பொது மக்களையும், சிறுவர்களையும் ஒரு இடத்தில் ஒருங்கிணைத்த நாங்கள் சிறுவர்களை ஆடல், பாடல்களின் ஊடாக மகிழ்வித்ததுடன் சிறுவர்களின் திறமைகளையும் அவ்விடத்தில் வெளிக்கொண்டுவந்து  அவர்களுக்கு இனிப்புக்கள்,
பிஸ்கட்டுகள், போசாக்கு உணவுகளையும் வழங்கிவைத்தோம்.

எங்களுடைய இந்த நிகழ்வுகளை சற்றும் எதிர்பார்க்காது வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக்களை பற்றிய சிந்தனைகளுடனும் தங்களது தொழில் பாதிக்கப்பட்டதன் கவலைகளுடனும் இருந்த பெற்றோர்களுக்கும் அவர்களுடைய சிறுவர்களுக்கும் எங்களுடைய இந்த நிகழ்வுகள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் நம்பிக்கையையும் உண்டாக்கியது. குறிப்பாக பிரதேச செயலாளரே நேரடியாக மக்களுடன் இணைந்து தங்களது சிறுவர்களை மகிழ்வித்த சம்பவம் அங்கிருந்த மக்களுக்கு வியப்பையும், மகிழ்வையும் ஏற்படுத்தியிருந்தது.

“ இதுவரைக்கு ஒரு ஐயா மாறும் இப்படி எங்களோட வந்து பேசிக் கதச்சதில்ல தம்பி இந்த ஐயாதான் எங்கட புள்ளைகளோடையும், எங்களோடையும் இருந்து இப்படியெல்லாம் செய்றாறு” என்றார் அங்கிருந்த முதியவர் ஒருவர்.
 உண்மையில் அவர்களை மட்டுமல்ல எங்களையும் பிரதேச செயலாளரின் செயற்பாடுகள் வியப்பில் ஆழ்த்தியிருந்தது அவர் மிகுந்த வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் அங்குள்ள மக்களுடன் எந்தவித அதிகார தோரணையும் இன்றி மிகவும் எளிமையாக மக்களுடன் மக்களாக இணைந்து செயற்பட்டிருந்தார்.

கொடுவாமடுவில் உள்ள சிறுவர்களுக்கான நிகழ்வுகளை நிறைவுசெய்துகொண்டு வேப்பவெட்டுவான் பாடசாலையில் தங்கியிருந்த சிறுவர்களை சந்திக்கச் சென்ற எங்களுக்கு அங்கு ஒரு அதிர்ச்சியான, மனவேதனைப் படக்கூடிய அனைவரையும் வியக்கவைத்த அந்த சம்பவத்தின் சாட்சி காத்திருந்தது.

வேப்பவெட்டுவான் பாடசாலையில் தங்கியிருந்த சிறுவர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து ஆடல், பாடல் நிகழ்வுகளை ஆரம்பித்த எங்களுக்கு ஆரம்பமே அசத்தலாக இருந்தது காரணம் பாதிப்புக்கு உள்ளான கைகளுடன் எழுந்த சிறுவனொருவன் பெரும் சத்தத்துடன் ஒரு பாடலை பாடியமர்ந்தான். அந்த சிறுவனின் பாடலும், அவனது விசேடதேவைக்குட்பட்டிருந்த உடலமைப்பும், பேச்சும் அங்குள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக பிரதேச செயலாளருக்கும், சேவகம் தொண்டு நிறுவனத்தினருக்கும் இந்த சிறுவனின் செயற்பாடுகள் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.

ஒரு புறம் சிறுவர்களுக்கான ஆடல்,பாடல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்க மறுபுறம் எங்களை வியக்கவைத்த அந்த சிறுவனை அழைத்துபேசியபோது அந்தச் சிறுவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரயில்  தண்டவாளத்தில் நடந்த ஒரு தற்கொலையின் சாட்சியென்பதை அறிந்தபோது எங்களது மனம் மிகுந்த வேதனையடைந்தது.

ஏழு வயது நிரம்பிய அந்த சிறுவனின் பெயர் அனோஜன் வேப்பவெட்டுவான் பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி பயின்றுவருகின்றான். உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளான் ஆனால் அதற்கான சூழலும் உதவியும் இல்லாமல் மிகுந்த போராட்டத்தின் மத்தியில் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகின்றான்.
இந்த சிறுவனின் இந்த துன்பகரமான வாழ்வுக்கு அவனது வாழ்க்கையில் நடந்த அந்த துன்பகரமான நிகழ்வுதான் காரணம்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முதல் முப்பது வயதையுடைய சசிகலா என்ற அவனது தாய் ஐந்து வயதாக இருந்த இந்த சிறுவனுடன் முறக்கெட்டான்சேனையில் ரயில்வே தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் குடும்பத்தகராறு காரணமாக தாயும் குழந்தையும் தற்கொலை செய்துகொண்ட பல சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் இந்த சம்பவத்தில் தாய் ரயிலில் அடிபட்டு இறந்துவிடுகின்றாள் அவள் தூக்கிச்சென்ற அந்த சிறுவன் ரயிலில் அடிபட்டு தூக்கிவீசப்பட்டு உடலுறுப்புக்கள் பாதிக்கப்பட்டு உயிர்பிழைக்கின்றான்.

இன்நிலையில் பல மாதங்கள் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த அனோஜன் செயழிழந்த தனது ஒருபக்க உடல் உறுப்புக்கள் சில செயற்பட ஆரம்பித்தாலும் இன்றும் அவனது கை, இடுப்பு, கழுத்து போன்ற பகுதிகள் செயற்படாமலிருக்கின்றபடியால் தனக்கான மருத்துவம், கல்வி, வாழ்வாதாரம், பாதுகாப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றான்.

தனது எழுபது வயது செல்லம்மா பாட்டியின் பாதுகாப்பில் இருக்கும் இந்த சிறுவனுக்கான பொருளாதார செலவுகளை கவனிப்பார் யாரும் இல்லை இது குறித்து கருத்து தெரிவித்த செல்லம்மா பாட்டி “இவன்ட அம்மா செத்ததில இருந்து நான்தான் மகன் இவன கவனிச்சித்து வாரன் எனக்கு வயசும் போயித்து ஆக்கள் தார உதவிய வைச்சித்தான் நாங்க சீவிக்கிறம் தம்பி நான் செத்தா இவனப்பார்க்க ஒருவரும் இல்ல தம்பி” என்று தனது உள்ளக்குமுறல்களை சொல்லி அழுதார் அவர்.

இவர் மட்டுமல்ல இந்த முகாமில் இருந்த கிராமசேவையாளர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், ஊர்பெரியார்கள் எனப்பலரும் இந்தச் சிறுவனின் எதிர்காலம் பற்றி மிகுந்த வேதனையுடன் எங்களிடம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதுடன் “நீங்கள் தான் ஐயா இவனுக்கு உதவி செய்யவேனும் இவன் நல்லா படிப்பான் ஐயா” என்று பிரதேச செயலாளரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் ஒரு பெண்மணி

இவற்றையெல்லாம் பார்த்த பிரதேச செயலாளருக்கும், எங்களுக்கும் இந்த சிறுவனுக்கான உதவியை உடனடியாக செய்யவேண்டும் என்ற ஆதங்கம் ஏற்ப்பட்டது உடனடியாகவே இந்த சிறுவனுக்கு இவ்வாண்டு பாடசாலை செல்வதற்குரிய சகல உதவிகளையும் தான் செய்வதாக வாக்குறுதியளித்தார் அத்துடன் சேவகம் நிறுவனத் தலைவரிடம் இந்த சிறுவனுக்கான உதவிகளை உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார் நாங்களும் அதை ஏற்றுக்கொண்டு ஒரு இனம்புரியாத ஏக்கத்துடன் அவ்விடத்தை விட்டு வெளியேறினோம்.

உண்மையில் இந்த சிறுவனை ஒரு ரயில் சம்பவத்தின் சாட்சியாக மட்டும் எம்மால் பார்க்கமுடியவில்லை இந்தச் சிறுவன் ஒட்டுமொத்த மட்டக்களப்பு வாழ் மக்களின் மனசாட்சியாகவே இருக்கின்றான். இன்று இவனைப்போன்ற பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் எமது மாவட்டத்தில் யுத்தம், இயற்கை, மற்றும் வேறுகாரணங்களினால் பாதிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.  

குறிப்பாக கிராமப்புறங்களில் இதுபோன்ற சிறுவர்கள் பலர் தங்களுக்கு பழக்கப்பட்ட வாழ்க்கையாக நினைத்து இதுதான் தங்களது தலைவிதியென்று நினைத்துக்கொண்டு தங்களது திறமைகளையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு எதிர்காலத் தலைவர்கள் பலர் எம் கண்களுக்கு தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரினதும் மனசாட்சியாக இருந்து இந்தக் கட்டுரை அனைவரையும் செயற்படத்தூண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்.

என்னதான் இது போன்ற ஆயிரக்கணக்கான சிறுவர்கள் எமது பிரதேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும்; அவர்களைப் பற்றி எங்களுக்கு தெரிவதில்லை காரணம் இவர்கள் அரசியல்வாதிகளோ அல்லது தலைவர்களோ இல்லை இதனால் இவர்களை வெளிக்கொண்டுவருவதற்கு ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தவறிவிடுகின்றனர் எனவே அந்த தவறுகளை திருத்தி நாளைய தலைவர்களை இன்றே நாம் உருவாக்கவேண்டும் என்ற உன்னத நோக்குடனேயே இதுபோன்ற கட்டுரைகளை நாங்கள் எமது ஊடகத்தின் ஊடாக வெளிக்கொண்டு வருகின்றோம். இது போன்ற சம்பவங்களை ஏனையவர்களும் வெளிக்கொண்டுவந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வரவேண்டும்.

இன்று எமது மாவட்டத்தில் யுத்தம், இயற்கை, மற்றும் வேறுகாரணங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலர் முன்வருகின்றதை பார்க்கும்போது மிகுந்த சந்தோசமாகவுள்ளது. இவ்வாறு உதவி செய்ய முன்வருபவர்களுக்கு இதுபோன்ற கட்டுரைகள் மற்றும் சீலன் போன்றோரின் கட்டுரைகள் தூண்டுதலாக அமைந்துள்ளதாக புலத்திலும், தாயகத்திலும் உள்ள சமூகசேவையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே இதுபோன்ற செய்திகளின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் சமூக,பொருளாதார,சிறுவர் அபிவிருத்திக்கு வழியமைத்துக் கொடுக்கும் மட்டக்களப்பு இணையத்திற்கு நன்றிகளை கூறிக்கொள்ளும் அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நன்மை கருதி இதுபோன்ற உதவிகளைச் செய்கின்றவர்களையும், செய்ய முன்வருகின்றவர்களையும் பாராட்டி வாழ்த்தி விடைபெறுகின்றேன் நன்றி.

உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை கீழே எதிர்பார்க்கின்றோம். 
                                               தாயை இழந்து தவிக்கும் சிறுவன்