மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேப்பவெட்டுவான் பாடசாலை மாணவர்களுக்கு சேவகம் நிறுவனத்தினர் உதவிகளை வழங்கிவைத்தனர்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பல மாணவர்களின் பாடசாலை உபகரணங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கவேண்டிய கட்டாயத் தேவைகள் மட்டக்களப்பில் எழுந்துள்ளது.
மேற்படி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் சேவகம் நிறுவனத்தினால் “மாணவர்களுக்கு கைகொடுப்போம்” என்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக அண்மையில் வேப்பவெட்டுவான் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை அப்பியாசக் கொப்பிகளை ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் ஊடாக சேவகம் நிறுவனத்தினர் வழங்கி வைத்தனர்.
இன் நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ்.கங்காதரன், சேவகம் நிறுவனத் தலைவர் திரு.எஸ்.நிலாந்தன், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.ஜெயசோபராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் வேப்பவெட்டுவான் கிராமசேவையாளர், வேப்பவெட்டுவான் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.























