வவுணதீவில் மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையின் உலக ஈரநில தின நிகழ்வு நடைபெற்றது!


(தீரன்)
மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையின் உலக ஈரநில தின நிகழ்வு மட்டக்களப்பு வவுணதீவு மட்/பரமேஸ்வரா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.

“ஈர நிலங்கள் நீரைப் பாதுகாக்கின்றன” என்ற தொனிப்பொருளில் இம்முறை  மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உலக ஈரநில தின நிகழ்வு நாடுபூராகவும் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான  உலக ஈரநில தின நிகழ்வை இம்முறை மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையினர் வவுணதீவு மட்/பரமேஸ்வரா வித்தியாலயத்தில் நடத்தியதுடன்  “ஈர நிலங்கள் நீரைப் பாதுகாக்கின்றன” என்ற தொனிப்பொருளில் வவுணதீவு மட்/பரமேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்தப்பட்டது.

இன்நிகழ்வில் ஈர நிலங்களின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், மாணவர்களால் ஈரநிலங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவங்களை வலியுறுத்தும் பதாகைகள் தாங்கிய விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.

மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையின் மாவட்ட பொறுப்பதிகாரி திரு.M. கோகுலன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இம்முறை உலக ஈரநில தினத்தில் இலங்கையின் ஆறாவது ரம்சார் ஈரநில பிரதேசமாக வில்பத்து பகுதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.