த.லோகதக்சன்முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 121வது பிறந்த தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை தமிழ்ச் சங்கத்தினரால் வாழைச்சேனை விபுலானந்த வீதியில் அமைந்துள்ள விபுலானந்தர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பிறந்தநாள் தினம் நேற்று புதன்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.
இச்சிலையானது சுமார் 55 வருடங்களுக்கு முன்னர் இவ்விடத்தில் நிறுவப்பட்டது என்பதோடு சுவாமி அவர்களின் முகச்சாயலோடு மிகவும் ஒத்துப்போகின்ற சிலைககளுள் இதுவும் ஒன்று என்பது முக்கியமானது.
விரைவில் வாழைச்சேனை தமிழ்ச் சங்கத்திலிருந்து சஞ்சிகை ஒன்றும் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சுவாமி விபுலானந்தர் பற்றிய துண்டுப் பிரசுரமும் சங்கத்தினரால் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் சங்கத்தின் தலைவர் கலாபூஷணம் தாழை செல்வநாயம், உபதலைவர் பெ.புண்ணியமூர்த்தி, செயலாளர் அ.ஜெயச்சந்திரன், உபசெயலாளர் அ.ஸ்ரீதர், பொருளாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், உறுப்பினர்களான எஸ்.கணெசமூர்த்தி, எஸ்.தர்மபாலன், எ.த.ஜெயரஞ்சித், எஸ்.ராஜ்குமார், கவிஞர் எஸ்.முத்துமாதவன், திருமதி.கோகிலா, செல்வி.எஸ்.சத்தியகலா மற்றும் வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் மு.தவராஜா போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சங்கத்தின் உபசெயலாளர் அ.ஸ்ரீதர் உரையாற்றுகையில்!
கிழக்கு மண்ணில் மாபெரும் அடையளமாகத் திகழ்கின்ற சுவாமி விபுலானந்தர் உலகத் தமிழர் நெஞ்சங்களில் என்னென்றும் நிலைத்து நிற்பவர். மொழி, இனம், சமயம், சாதி வேறுபாடுகள் கடந்து ஒரு துறவியாய், நல்லாசானாய், அறிவியல் விற்பன்னராய், மொழியாராய்ச்சி அறிஞனாய், பத்திரிகை ஆசிரியராய், உலகின் முதல் தமிழ் பேராசிரியராய் எண்ணற்ற பணிகள் புரிந்தவர்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழரின் பழந்தமிழ் இசையின் பெரும்புகழ் சாற்றும் 'யாழ் நூல்' சுவாமிகளின் பணியின் உச்சம். இத்தனை சிறப்புமிக்க சுவாமிகளின் பிறந்த தின நிகழ்வில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியதில் வாழைச்சேனை தமிழ் சங்கம் சார்பில் பெருமையடைகின்றோம்.
அத்தோடு அண்மையில் வாழைச்சேனையில் தமிழ்;ச் சங்கத்தை தோற்றுவித்தோம். இதற்கு வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் மு.தவராஜா மற்றும் எழுத்தாளர் ஆ.மு.சி.வேலழகன் போன்றோர் இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
வரும் சனிக்கிழமை எமது சங்க உறுப்பினர் எஸ்.கணேசமூர்த்தியின் இல்லத்தில் சங்கத்தின் இரண்டாவது ஒன்றுகூடலை நடாத்தவுள்ளோம். அதனைத் தொடந்து சங்கத்தை பதிவு செய்வது, புதிய அங்கத்தவர்களை இணைப்பது போன்ற விடயங்களோடு, மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் கிளைச் சங்கமாக உருவாக்க வேண்டும் என்கின்ற சிந்தனையுடன் தோற்றம் பெற்றுள்ள இச்சங்கம் தனித்து இயங்குவதா அல்லது மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் கிளைச் சங்கமாக இயங்குவதா போன்ற விடயங்கள் பற்றி தீர்மானிக்கப்பவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.





















