மட்டக்களப்பில் உள்ள தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை அரசாங்க அதிகாரிகளே தடுக்கின்றனர்!-இணையம்

(தீரன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைசெய்யும் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்க அதிகாரிகளே செயற்படுகின்ற துர்ப்பாக்கிய நிலை இங்கு காணப்படுகின்றது என்கிறார் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணையத் தலைவர் கமலதாஸ் அவர்கள்.


நேற்று முன்தினம்(27.02.2013) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணையத்தின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்க அதிகாரிகள் தடையாக உள்ளமையே மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலாமிடத்திற்கு வருவதற்கு காரணமாகவுள்ளது.

கடந்த யுத்த காலப்பகுதியில் கூட எங்களது தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கும் இணையத்தின் செயற்பாடுகளுக்கும் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் அரசாங்கமோ, இராணுவமோ விதிக்கவில்லை அந்த காலகட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயற்பட முடிந்தது ஆனால் இன்று இராணுவ கெடுபிடிகளை விட அரசாங்க அதிகாரிகளின் கெடுபிடிகளே அதிகமாகவுள்ளது.

சிறுவர் இல்லங்களை மூடச்சொல்கின்றனர், தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குகின்றனர், கல்வித் திட்டங்களுக்கு அனுமதி தருவதில்லை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கட்டிடங்களை மீளத்தருமாறு வற்புறுத்துகின்றனர். இவ்வாறு தொண்டு நிறுவனங்களின் மீது மட்டக்களப்பில் உள்ள அரசாங்க அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அவற்றின் செயற்பாடுகளை முடக்குகின்றனர் இதன் காரணமாக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு இன்று தொண்டு நிறுவனங்கள் முன்வருவதில்லை இன்று மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலிடத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இன்று மட்டக்களப்பிற்கு வெளியில் இருந்து வரும் பல சங்கங்களுக்கும்,தொண்டு நிறுவனங்களுக்கும் இங்கு பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது ஆனால் மட்டக்களப்பிற்குள் பலவருடங்களாக சேவை செய்துவரும் தொண்டு நிறவனங்களின் செயற்பாடுகளை இங்குள்ள அரசாங்க அதிகாரிகள் தடுக்கின்றனர் இது எந்தவகையில் நியாயமானது.
இன்று சர்வதேச தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்ட பல பாலர் பாடசாலைகள் மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது இதனால் வருடாவருடம் இதனூடாக கற்விகற்கும் கிராமத்து மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

எத்தனை காலத்திற்கு நாம் சர்வதேச தொண்டு நிறுவனங்களில் தங்கி வாழ்வது என்பதில் இங்குள்ள அரசாங்க அதிகாரிகள் சிந்தித்து செயற்படவேண்டும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இங்குள்ள உள்ளுர் தொண்டு நிறுவனங்களை கட்டியெழுப்பும் போதுதான் எமது மக்களுக்கான நீடித்த நீண்டகால செயற்திட்டங்களை நிரந்தரமாக முன்னெடுக்கமுடியும் என்பதை அரசாங்க அதிகாரிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்று பல மாவட்டங்களில் இணையத்துடன் இணைந்து மாவட்டசெயலகங்கள் செயற்படுகின்றதை காணக்கூடியதாகவுள்ளது ஆனால் மட்டக்களப்பில் அவ்வாறான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது மாவட்ட செயலகமும் இணையமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரப் பணிகளை முன்னெடுத்த வரலாறுகளும் உண்டு ஆனால் இன்று அவ்வாறான சூழ்நிலைகள் இல்லை.

மீண்டும் நாங்கள் அவ்வாறான நிலைமையை உருவாக்கவேண்டும் இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள இணையத்தின் நிர்வாகம் மாவட்ட செயலகத்தினூடான உறவைப் பலப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை தளர்த்தி எதிர் காலத்தில் மாவட்ட செயலகமும் இணையமும் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம் எனக்கூறினார்.