மட்டக்களப்பின் புராதன இடங்கள் உலக புராதனம் பேணும் இடங்களாக மாறவேண்டும் - அருண் தம்பிமுத்து

(கிருஸ்ணா)

கல்லடிப்பாலம் நவீனமயமாக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்குவரும் திறக்கப்படும் இந்தவேளையில் மட்டுநகரின் வாவியையும் அதனை அண்டியுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களையும் உலக புராதனம் பேணும் இடங்களாக மாற்றவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனது நான்கு தலைமுறைகளுக்கு முன் தோன்றிய இ.ஆர்.தம்பிமுத்து அவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருந்த வேளையிலேயே இக்கல்லடிப்பாலம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் நிறுவுதலானது ஒருபுறம் கொடையாகவும், மறுபுறம் சாபமாகவும் அமைந்துள்ளது ஏனெனில் இந்த பாலம் அமைந்த காரணத்தால் கிழக்கு மாகாண மட்டக்களப்பு நகரிற்கு வந்துசென்ற பெரிய படகுகளும், உருக்கள் எனப்படும் பாய்மரக்கப்பல்களும் நகரிற்குள் உட்பிரவேசிப்பது தடைப்பட்டது போன்று இறங்குதுறைமுகம் என்ற எண்ணக்கருவும் அழிபட்டுப்போய்விட்டது.

இக்கல்லடிப்பாலமானது மட்டு.மேற்கு, மட்டு.கிழக்குப் பாகங்களை இணைக்கும் அதேவேளை, தினசரி சராசரியாக 10000 ற்கும் அதிகமான வாகனங்கள் இதனூடாக பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏ4 வீதியான இந்தப்பாதை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை இணைக்கும் பாலமாகவும் விளங்குகின்றது. இது 1924 களில் அன்றைய தேசாதிபதியாக இருந்த “சேர் வில்லியம் ஹென்றி மனிங்” என்பவரால் நிறுவப்பட்டுள்ளது.

ஏறத்தாள 75 வருடகால பழமையைக் கொண்டதுடன் பிரித்தானியர் காலத்தில் “லேடி மனிங் பாலம்” என்றும் அழைக்கப்பட்டது. “நூறுவருட மட்டுநகர் நினைவுகள்” எனும் சமூகவரலாற்று நூலில் (1893-1993) பிரான்சிஸ் என்பவர் இந்தப்பாலம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு வாவி இலங்கையில் மட்டக்களப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன வாவி ஆகும். சுமார் முப்பது மைல் நீளமான இவ்வாவி ஏறத்தாழ 27527 ஏக்கர் பரப்பினைக் கொண்டுள்ளது. கடலில் இருந்து ஏறக்குறைய 20 மைல்கள் வரை உவர் நீரையும், ஏனைய பகுதி நன்னீரையும் கொண்டுள்ளது. உப்பு நீரில் மீன் பிடித்தலும், நன்னீரில் வேளாண்மையும் இடம்பெறுகின்றன.

அத்துடன் இவ்வாவியில் கண்டல் வகைத்தாவரங்கள் காணப்படுவதும் ஓர் இயற்கை அழகாகும். இந்தப்பிரதேசம் அதாவது கல்லடி முதல் - முகத்துவாரம் வரையிலான வாவிப்பகுதி மீண்டும் ஒரு சுற்றுலாத் துறைமுகமாக உயர்வுபெற வேண்டுமென்பதே எனது கருத்தாகும்.

அத்துடன் இவ்வாவியை அண்டியுள்ள பிரதேசம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் உல்லாச புரியாக உருவாக்கப்பட வேண்டும், இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டும் அதேவேளை தனிமனித வருமானமும் அதிகரிக்கப்படலாம்.

மட்டக்களப்பு இயற்கையான வளங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒல்லாந்தர் காலக் கோட்டை, கோவில்கள், தேவாலயங்கள், பாடசாலைகள் என்பன இன்றும் அந்தக்காலத்தின் கட்டிட அமைப்புகளுடன் தலைநிமிர்ந்து நின்று பார்ப்பவர்களுக்கு ஓர் கண்கொள்ளாக்காட்சி அளிக்கின்றது. அவை சரியான முறையில் புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதன்மூலம் தொடர்ச்சியான உல்லாசப்பயணிகளை மேலும் வரவழைக்கலாம்.

மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையும் நீண்டகால வரலாற்றினைக் கொண்டுள்ளது. இலங்கையில் தற்பொழுது புராதனம் பேசும் புனித பிரதேசங்களாக காணப்படுபவை,அநுராதபுரம், பொலன்நறுவை, சிகிரியா, தம்புள்ளை, கண்டி, காலிக் கோட்டை, சிங்கராஜவனம், நக்கில்ஸ் மலைத்தொடர் போன்றவையே குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.

கிழக்கின் பழமையும் பெருமையும் தரும் இந்த புராதன விடயங்களை UNESHCO வினது புராதனம் பேணும் நகரங்களின் பொருட்களின் வரிசையில் உள்ளடக்க இயலுமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். இதனைக் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுப்பேன்.