திருகோணமலை வரோதயநகர் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் இன்று 20.03.2013 ஆம் திகதி காலை 09.15 மணியளவில் விவசாய அமைச்சர் நசீர் அகமட் அவர்களின் இணைப்புச் செயலாளர் சுத்தியலுடன் நுழைந்து அமைச்சு அலுவலக கண்ணாடிகள், கணணிகள் மற்றும் அலுவலகத்திலிருந்து பல பொருட்களை அடித்து நொருக்கி உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளார்.இதன்போது பிரதம கணக்காரளரின் அலுவலக அறைக்கதவு சேதமடைந்துள்ளதுடன் ஏனைய பல பகுதிகள் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இதுதொடர்பில் பீதியடைந்த உத்தியோகத்தர்கள் மாகாண பிரதம செயலாளரிடம் சென்று தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தம்மை வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் வழங்குமாறும் அல்லது குறித்த இணைப்பச் செயலாளரை பதவியிலிருந்து நீக்குமாறும் முறையிட்டுள்ளனர். இதுதொடர்பாக பிரதம செயலாளர் ஆராய்ந்து முடிவு செய்வதாக தெரிவித்துள்ளார்.
உத்தியோகத்தர்கள் குறித்த இணைப்புச் செயலாளரை பதவியிலிருந்து இடைநிறுத்தும் பட்சத்தில் தாம் அலுவலகத்தில் கடமை புரிய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கைமேற்கொண்டு உத்தியோகத்தர்கள் சுதந்திரமாக கடமைபுரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுகின்றனர்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் இணைப்புச் செயலாளர் அனிஸ்டஸ் ஜெயராஜை தொடர்புகொண்டு வினவியபோது,
"கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சிற்கான பிரதம கணக்காளருடன் மன வருத்தங்கள் ஏற்பட்டன. இதனை முறையிட சென்றபோது கணக்காளரின் கதவின் கண்ணாடி என்னால் சேதமாக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மாகாண பிரதம செயலாளர் ஆகியவர்களுடன் கலந்துரையாடி இந்த பிரச்சினை சுமுக நிலை கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரிகள் தற்போது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.














