(உ.உதயகாந்த்)
தேசத்திற்கு மகுடம் ஏழாவது பட்டாபிஷேகத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளில் பொலிசாரின் பங்களிப்புடன் பிரச்சனைகள் இனம் காணப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு படையினருக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லுறவை பேன வேண்டும் எனும் மகிந்த சிந்தனைக்கு அமைவாக நடைபெற்று வரும் 43 பொலிஸ் நடமாடும் சேவையில் காத்தான்குடி பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட ''சுரகிமு லங்கா சமூக பொலிஸ் சேவை '' தலைப்பிலான நடமாடும் சேவையின் இறுதி நாள் நிகழ்வானது கல்லடிவேலூர் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையில் 27.02.2013 திகதி மாலை 05.00 மணியளவில் மிகவும் கோலாகலமாக வான வேடிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் நடமாடும் சேவை நிகழ்வுகளில் 10 வதாக சேவை நிறைவு செய்த நிகழ்வாகவும், நிறைவு செய்யப்பட்ட 10 நடமாடும் சேவை நிகழ்வுகளில் அண்ணளவான பெறுமதியானது சுமார் 38 இலட்சத்தையும் தாண்டியுள்ளது என கிழக்கு மாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர அவர்கள் சிறப்புரையாற்றும் போது கூறினார்.
இந் நிகழ்வில் அதிதிகளாக கிராம உத்தியோகத்தர்களும் ,பாடசாலையின் அதிபர்களும் , இராணுவ உயரதிகாரிகளும் , கடற்படை அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.
மேலும் இந் நிகழ்வின் போது கல்விசார் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றவர்களின் திறமைகள் அரங்கேற்றப்பட்டதுடன் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.












