வந்தாறுமூலை டையமன் விளையாட்டுக்கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா

மட்டக்களப்பு வந்தாறுமூலை டையமன் விளையாட்டுக்கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சித்திரைப் புதுவருடத்தினை வரவேற்றும் முகமாகவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்ட விளையாட்டு விழாவில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. இதன் இறுதி நாள் விழாவில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவருமான வி.முரளிதரன், சிறப்பு அதிதிகளாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அருண் தம்பிமுத்து, முன்னாள் மகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜா, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.சிறிநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டு விழாவில், சைக்கிள் ஓட்டம், மரதன், பெண்களுக்கான குளிர்பானம் குடித்தல், கிடுகு பின்னுதல், சாப்பாட்டு ராமன், கயிறு இழுத்தல், நிற முட்டி உடைத்தல், தலையணைச் சமர், வழுக்கு மரம் ஏறுதல், துவிச்சகர வண்டியை மெதுவாகச் செலுத்துதல், நெல் மூடை தூக்குதல் எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு நிகழ்வுகளில் மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றிருந்தன். இப் போட்டிகளில் பெருந்தொகையான இளைஞர் யுவதிகளும் குடும்பப் பெண்கள், ஆண்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.