பட்டிப்பளையின் இரு பிரதேசங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது


(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார விநியோகம் இல்லாத பகுதிகளுக்கு மின்சாரம் பெற்றுக்கொடுப்பதற்காக 6000 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மகிழடித்தீவு தெற்கு முதலைக்குடா மேற்கு ஆகிய இரு பிரதேசங்களுக்கான மின்விநியோகம் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

புட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த பகுதிகளுக்கான மின்சார விநியோகம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மகிந்த சிந்தனையின் இலங்கையின் பின்தங்கிய கிராமங்கள் அனைத்துக்குமான மின் திட்டத்தின் கீழ் இதற்கான நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தன.

மகிழடித்தீவு தெற்கு மின்விநியோகம் சுமார் இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் முதலைக்குடா மின்விநியோகத்திட்டம் 110 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த மின்விநியோகத்திட்டம் மூலம் இரு பிரதேசங்களையும் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் நன்மையடையவுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இந்த மின் விநியோகத்திட்டம் வழங்கப்பட்டதன் மூலம் இப்பிரதேச மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தன்,களுவாஞ்சிகுடி பிராந்திய மின் அத்தியட்சர் அனுசாந்த் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.