படுவான்கரை பிரதேசத்தில் தேசிய மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் நடமாடும் சேவை


(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் தமது ஆவனங்களை இழந்தவர்கள் அதனைப்பெற்றுக்;கொள்ளும் வகையில் நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டுவருகின்றன.


தேசிய மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதி திட்டத்தின் ஊடாக இதன் சேவைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று,பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களில் இதற்கான நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் போரதீவுப்பற்று பிரதேச நடமாடும் சேவை பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையில் தேசிய மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உதவிச்செயலாளர் திருமதி கிருஸ்ணவதனா,கிழக்கு மாகாண உதவி பதிவாளர் திருவருள் மற்றும் ஆட்பதிவுத்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது தேசிய அடையாள அட்டை,பிறப்பு,இறப்பு பதிவுகள்,காலம் கடந்த பதிவுகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டதுடன் முத்திரை,புகைப்படம் எடுத்தல்,பொலிஸ் பதிவுகள் என்பன இலவசமாக வழங்கப்பட்டன.

இதனடிப்படையில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதன்போது பயன்களைப்பெற்றுக்கொண்டதாக பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தெரிவித்தார்.

இதேபோன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டதாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி வி.சிவப்பிரியா தெரிவித்தார்.

இதன்போது 800க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் நன்மை கருதி தேசிய மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் இந்த நாடமாடும் சேவை நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.